Saturday, 24 May 2008

சிறிலங்காவின் கேவலமான பக்கத்தை மறைத்து வந்த மனித உரிமைகள் சபை உறுப்புரிமையும் பறிபோய் உள்ளது: "லக்பிம"


சிறிலங்கா அரசின் கேவலமான தோற்றப்பாட்டை மறைத்து வந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கான உறுப்புரிமையும் தற்போது பறிபோய் உள்ளது. எம்மால் அதனை தக்கவைக்க முடியவில்லை. எனவே நாம் எங்கு போகின்றோம்? என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இருந்து சிறிலங்கா வெளியேற்றப்பட்ட பின்னர் அதன் எதிர்காலம் தொடர்பாக நாம் பேசி வருகின்றோம்.

சிறிலங்கா ஒரு தகுதி இழந்த நாடு. இலங்கை மக்கள் பல வழிகளிலும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

ஆயுதக்குழுக்கள் நகரங்களிலும், கிராமப் புறங்களிலும் மக்களை துன்புறுத்தி வருகின்றன. எரிபொருட்களின் விலை வானை தொட்டுள்ளதோ இல்லையோ பொருளாதாரம் சீரழிந்து போய் உள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு ஒரு தேவையற்ற, முடிவற்ற போரை கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் நடத்திக்கொண்டிருக்கின்றது.

நாட்டில் ஊழல்களும், வீண் விரயங்களும் அதிகரித்துள்ளன. இவை தொடர்பாக அரசு அக்கறை கொள்வதில்லை என்பதை நாம் மறந்துவிட முடியாது.

தேர்தல் கூட வன்முறை மூலம் வெற்றியீட்டப்பட்டுள்ளது.

எமது கேவலமான இந்த தோற்றப்பாட்டை மறைத்து வந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கான உறுப்புரிமையும் பறிபோய் உள்ளது. எம்மால் அதனை தக்கவைக்க முடியவில்லை. எனவே நாம் எங்கு போகின்றோம்?.

தலைக்கு மேல் வெள்ளம் ஏறினால் அது சாண் ஏறி என்ன? முழம் ஏறி என்ன என்ற நிலையில் தான் அரசு உள்ளது.

எனினும் மேலும் ஒரு மாற்று வழியும் உள்ளது. அதாவது அரசு தனது நிலமைகளை எண்ணிப்பார்த்து பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஐ.நா., அனைத்துலக சமூகம், உலகப் பொருளாதாரம் என்பவற்றை நாம் கருத்தில் எடுக்க வேண்டும்.

30 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் போர் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, அதன் அபிவிருத்தியையும் கடுமையாக பாதித்துள்ளது. இது பாரிய உளவியல் தாக்கங்களை உண்டு பண்ணியுள்ளது. வீழ்ந்து போன பல மூன்றாம் உலக நாடுகளில் இந்த உளவியல் தாக்கம் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியிருந்தன.

ஐ.நாவின் மனித உரிமைகள் சபையின் அங்கத்துவத்தை சிறிலங்கா இழந்திருந்தாலும், அரைப் பங்கிற்கும் மேற்பட்ட நாடுகள் சிறிலங்காவிற்கு ஆதரவாக வாக்களித்தது ஒரளவு ஆறுதலை தருகின்றது.

எனினும் தற்போது ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் படலங்கள் ஆரம்பமாகி உள்ளன. நாம் மேற்குலகத்தை கடுமையான வெறுப்பேற்றி உள்ளோம் என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு எனவே எம்மால் அதிக பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாது என சிலர் வாதிடுகின்றனர்.

பாகிஸ்தானை விட சிறிலங்கா அரசு இராஜதந்திர ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: