Saturday, 24 May 2008

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு புதிய விசா நிபந்தனைகள்

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் இலங்கை வருவதற்கான விசா அனுமதி தொடர்பில் இலங்கை அரசாங்கம் புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிபந்தனைகள் தொடர்பான வரையறைகளை உள்நிர்வாக அமைச்சின் செயலாளர் டாக்டர்.யூ.விதானபத்திரன தயாரித்துள்ளார்.

‘சமூக சேவைகள் நிறுவனங்கள் அல்லது அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான தொழில்புரிவதற்கான வீசா வழங்குவது தொடர்பான வழிமுறைகள்’ எனும் தலைப்பில் இந்தச் சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டுக்குள் செயற்பட்டுவரும் நூற்றுக்கணக்கான அரசசார்பற்ற நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கிலேயே இந்த புதிய நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.

சில சமயங்களில் கண்காணிப்புக்கள் இல்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாகப் பணத்தை சேகரித்து அந்தப் பணத்துடன் இரவோடு இரவாக ஓடும் அரசசார்பற்ற நிறுவனங்களும் காணப்படுவதாக அரசாங்கத் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதுடன், அவற்றைக் கண்காணித்து குற்றச்செயல்களைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய சுற்றுநிரூபம் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தமக்குக் கிடைத்த பணத்தை உல்லாசப் பயணங்களுக்குப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தேர்தலில் இலங்கைக்கு ஆதரவு வழங்கக் கூடாதென அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏனைய ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில் கடந்தவாரம் இடம்பெற்ற தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது. இதன் பின்னணியில்; சர்வதேச அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்துக்கான விசா அனுமதியில் புதிய நிபந்தனைகளை அரசாங்கம் விதித்துள்ளது.

No comments: