Thursday, 15 May 2008

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு உறுப்புரிமை வழங்கப்படக் கூடாது - அங்கத்துவ நாடுகள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவம் இலங்கைக்கு வழங்கப்படக் கூடாதென அதன் உறுப்புரிமை நாடுகளிடம் சிவில் சமூக அமைப்பின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போன்ற அதிஉயர் சர்வதேச நிறுவனமொன்றில் அங்கம் வகிக்க வேண்டுமானால் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாப்பதில்; அதிக சிரத்தை காட்ட வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கீழே கையொப்பமிட்டுள்ள சிவில் சமுதாய அமைப்புக்களாகிய நாம் எமது நாட்டை முடமாக்குகின்றதாகப் பரந்துவரும் மனித உரிமை நெருக்கடியாலும் வளர்ந்துவரும் தண்டனை விலக்கீட்டுக் கலாசாரத்தாலும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

பொருத்தமான எல்லா வழிகள் ஊடாகவும் இலங்கை அரசாங்கத்துக்கு எமது கவலைகள் தொடர்பில் அனேக முறையீடுகளை நாம் செய்துள்ளோம். மீறல்களைத் தடுப்பதற்கு ஆதரவு கோரி சர்வதேச சமூகத்தையும், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தையும் கூட நாம் அணுகியுள்ளோம்.

எமது பணியின் போது நாளாந்த அடிப்படையில் அனேக கொடூரமான வன்செயல்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் பலியானவர்களும், அவற்றிலிருந்து எஞ்சிப் பிழைத்தவர்களுமான நிராயுதபாணியான சிவிலியன்கள் எமக்கு எதிர்ப்படுகின்றனர்.

நிதிக்கும், நிவாரணத்துக்குமான அவர்களின் தேடலில் நாமும் அவர்களுடன் இணைந்து கொள்கின்றோம். அனைத்து இலங்கையரினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்குமான பொறிமுறைகள் பலியானவர்களுக்கும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் நிதியையும் உண்மையையும் வழங்கத் தவறிவிட்டதுடன், மௌனமும் தண்டனை விலக்கீடுமென்ற ஒரு கலாசாரத்துக்கும் இடமளித்துவிட்டன.


இக் கூட்டு அனுபவம்தான் அதிகரித்த சர்வதேச நுண்ணாய்வுக்கான வேண்டுகோளை விடுப்பதற்கு எம்மை நிர்ப்பந்திக்கின்றது.

2008 மே மாதத்தில் இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலுக்கான மீள்தெரிவை நாடி ஐ.நா. பொதுச் சபையின் முன்னர் வருகின்றது. இலங்கையில் மனித உரிமைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டுமென்று நிலைமாறாது பிரச்சாரஞ் செய்துள்ள மனித உரிமைப் பாதுகாப்பாளர்களென்ற வகையில் நாம் 2006இல் அங்குரார்ப்;பண மனித உரிமைக் கவுன்சிலில் ஆசனமொன்றுக்கான எமது நாட்டின் முயற்சி இந்நாட்டில் மனித உரிமைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதற்கு வழி வகுக்குமென்று நம்பினோம்.


ஆனால், 2008இல் கவுன்சிலுக்கான இலங்கையின் மீள்தெரிவை எதிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உறுப்பினர்களிடம் இந்த வேண்டுகோளை விடுப்பதற்கு ஆழ்ந்த துயரத்துடனும், கவலையுடனும் இப்போது நாம் தீர்மானித்துள்ளோம். இலங்கை அரசாங்கம் 2006இல் கவுன்சிலின் உறுப்புரிமையை முதலில் ஈட்டிய போது பொறுப்பேற்ற ஈடுபாட்டுக் கடப்பாடுகளை கௌரவிக்கத் தவறியுள்ளதுடன், கடந்த ஈராண்டுகளில் இந்நாட்டில் மனித உரிமைகளின் கடுமையான சீர்குலைவுக்கும் தலைமை தாங்கியுள்ளது.

மனித உரிமைக் கவுன்சிலை உருவாக்கிய பொதுச் சபையின் 60ஃ251ஆம் தீர்மானத்தின் பிரகாரம் உறுப்பினர்கள் மனித உரிமைகளை ஊக்குவிப்பதிலும், பாதுகாப்பதிலும் அதியுயர் தரங்களை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் “கவுன்சிலுடன் ப+ரணமாக ஒத்துழைக்கவும் வேண்டும்”. மனித உரிமைக் கவுன்சிலுக்கு அரசொன்று தெரிவுசெய்யப்பட வேண்டுமாவென்று பரிசீலிக்கையில் உறுப்பு நாடுகள், “மனித உரிமைகளை ஊக்குவிப்பதிலும் பாதுகாப்பதிலும் வேட்பாளர்களின் பங்களிப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தேவைப்படுத்தப்படுகின்றன. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கையின் ஈராண்டுப் பதவிக்காலத்தின் போது மனித உரிமைகளின் நிலைமை சீரழிந்துள்ளது.


மீறல்களில் கவனஞ்செலுத்தி அவற்றைத் தடுப்பதற்குப் பயனுறுதியுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்கான அரசாங்கத்தின் விருப்பின்மை அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அதன் இயலாமையைத் தெளிவாக்கியுள்ளது.

மனித உரிமைகள் கவுன்சிலில் அதன் உறுப்புரிமையுடன் 2008 மார்ச்சில் காணாமற்போதல்கள் பற்றிய ஐ.நா. செயற்குழுவால் அறிக்கையிடப்பட்டவாறு, உலகில் காணாமற் போனவர்கள் பற்றிய முறைப்பாடுகளில் ஆகக்கூடிய எண்ணிக்கை இலங்கையிலிருந்து பதிவுசெய்யப்பட்ட நிகழ்வும் ஒருங்குசேர்கின்றது.


2007இல் ஊடகத்துறையினர் ஆபத்திலுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தை வகித்தது. 2006இலும், 2007இலும் 60க்கு மேற்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.


அல்லது “காணாமற் போயினர்.” இம் மீறல்கள் யுத்தத்துக்குத் திரும்பிய ஒரு சூழமைவில் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்த மனித உரிமை நெருக்கடியிலும் ஆயுதமேந்திய எல்லாத் தரப்பினராலும் சிவிலியன்கள் நேரடியாக இலக்குவைக்கப்படுதல் உட்பட சிவிலியன்களைப் பாதுகாப்பதற்குத் தவறியமை போன்ற, சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறலை நாம் கண்கூடாகக் கண்டோம்.


மனித உரிமை மீறல்கள் எல்லாவற்றுக்குமான பொறுப்பு முற்றுமுழுதாக அரசாங்கத்தைத்தான் சார்ந்துள்ளதல்லவென்று நாம் ஒப்புக்கொள்கின்ற அதேவேளையில், அதன் பிரசைகள் எல்லோரினதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அடிப்படைப் பொறுப்பு அரசில் தங்கியுள்ளதென்பதை நாம் அவதானிக்கின்றோம்.

முக்கிய சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களை நியமிப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையை சனாதிபதி நியமிப்பதற்கு தவறியதன் மூலம் அரசியலமைப்பை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கிறார்.


மனித உரிமைக் கவுன்சிலுக்கு இலங்கை தெரிவுசெய்யப்பட்ட ஒரு மாதத்தின் பின்னர் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரை அவர் ஒரு தலைப்பட்சமாக நியமித்தமை, எமது முதன்மையான தேசிய மனித உரிமை அமைப்பின் சட்டப+ர்வ நிலையையும் நம்பகத்தன்மையையும் கீழறுத்துவிட்டது.


இந்நடவடிக்கை தேசிய மனித உரிமை நிறுவனங்களின் சுயாதீனம் பற்றிய பாரிஸ் கோட்பாடுகளைத் தெளிவாக மீறியதுடன், 2007 திசெம்பரில் தேசிய மனித உரிமை நிறுவனங்கள் தொடர்பான சர்வதேச இணைப்புக் குழுவால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மதிப்புக் குறைக்கப்படுவதற்கும் ஒரு பிரதான காரணமாயிருந்தது.

அரசாங்கம் குறிப்பாக இலங்கையிலுள்ள சிறுபான்மைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தலை விடத் தேசிய பாதுகாப்புக் கரிசனைகளுக்குக் கூடிய முக்கியத்துவமளிக்க அனுமதித்துள்ளது. தற்போது வலுவிலுள்ள அவசரகால ஒழுங்குவிதிகள் விதிமுறையின்றிக் கைது செய்தலையும் குற்றப்பகர்வின்றி நீண்ட காலம் தடுத்துவைத்தலையும், அதேபோன்று சித்திரவதை செய்தலையும் இயலச் செய்கின்றன.


மோதலுடன் தொடர்பற்ற சம்பவங்களில் கூடச் சட்டவிரோதத் தடுத்துவைத்தல்களும் சித்திரவதையும் இடம்பெறுகின்றமை இன்றைய மனித உரிமை நெருக்கடியின் ஆழமான வேர்களைத் தான் முனைப்படுத்திக் காட்டுகின்றது.

சித்திரவதை பற்றிய விசேட தொடர்பாளர் மன்பிறெட் நோவக் அவர்கள் 2007இல் இலங்கைக்கு வருகை தந்த போது குறிப்பிட்டவாறு, இந்த ஒழுங்குவிதிகளின் ஏற்பாடுகளும் சுயாதீனமான கண்காணிப்பு இல்லாமையும் பாரதூரமான துர்ப்பிரயோகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

இக்காலப் பகுதியில் பாதுகாப்புப் படைகள் ~எல்ரீரீஈ| மற்றும் அரசாங்கத்தின் மௌனமான ஆதரவுடன் இயங்குகின்ற ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கெதிராகக் கடுமையான குற்றஞ்சார்த்தல்கள் செய்யப்பட்டுள்ளன. ~யுனிசெப்|

சிறுவரும் ஆயுத மோதலும் பற்றிய பாதுகாப்புச் சபையின் செயற்குழு அறிக்கைகள் வெளிப்படுத்தியவாறு ~எல்ரீரீஈ| மற்றும் ~ரீஎம்வீபி| ஆகிய இரண்டினாலும் சிறுவர் கடத்தப்படலும் பலவந்தமாகச் சேர்த்துக் கொள்ளப்படலும், இந்த வழக்கத்தை நிறுத்துவதற்கும் கடத்தப்பட்டவர்கள் எல்லோரையும் விடுவிப்பதற்கும் எந்தவொரு குழுவாலும் முறையாகத் திட்டமிடப்பட்ட முயற்சியெதுவும் எடுக்கப்படவில்லையென்பதைத் தெளிவாக்குகின்றன.


மீறல்களை ஆவணப்படுத்துகின்ற பல்வேறு அறிக்கைகள் உள்ள போதிலும் பெரும்பாலான மனித உரிமை மீறல்களுக்குப் பலியானவர்களும் அவற்றிலிருந்து எஞ்சிப்பிழைத்தவர்களும் பழிவாங்கும் நடவடிக்கைகள் பற்றிய அச்சத்தினால் முறைசார்ந்த முறைப்பாடொன்றைச் செய்வதற்குப் பெரும்பாலும் பயப்படுகின்றனர்.

பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்களில் இது குறிப்பாக உண்மையாகும். முறைப்பாடுகள் செய்யப்பட்டனவாகவும் நேரில் கண்ட சாட்சிகளும் வேறு நம்பகமான சான்றுரைகளும் சான்றுகளும் கிடைப்பனவாகவும் உள்ள சம்பவங்களில் கூட, மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர்கள் மீது குற்றப்பகர்வுகளுக்கும், குற்றத்தீர்ப்புகளுக்கும் வழிவகுக்கக்கூடிய பயனுறுதியுள்ள, பக்கச் சார்பற்ற புலனாய்வுகளையும் விசாரணைகளையும் நடத்துவதற்கு அதிகாரிகள் திட்டமிட்;டுத் தவறியுள்ளனர்.


இது மனித உரிமை மீறல்களுக்குப் பலியானவர்களும் அவற்றிலிருந்து எஞ்சிப் பிழைத்தவர்களும் நீதியையும் நிவாரணத்தையும் நாடுவதிலிருந்து அவர்களைத் தீவிரமாகத் தடுக்கின்ற தண்டனைவிலக்கீடும் பயங்கரமுமென்ற கலாசாரத்தைப் பலப்படுத்தியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அதிகரித்துவரும் கண்டனங்களுக்கு அரசாங்கம் பல்வேறு சனாதிபதி ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் பதிலளித்துள்ளது. அவற்றில் காணாமற் போதல்கள் பற்றிய தனிநபர் விசாரணை ஆணைக்குழு, சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவை சார்த்தப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்களின் புலனாய்வுக்கும், விசாரணைக்குமான சனாதிபதி விசாரணை ஆணைக்குழு என்பவை அடங்கும்.

இந்த ஆணைக்குழுக்களில் எதுவும் பலியானவர்களையும் பாதிக்கப்பட்ட சமூகங்களையும் செயல்விளைவுள்ள முறையில் பயன்படுத்தவுமில்லை அல்லது அவற்றின் புலன்விசாரணைகளின் விளைவாக மனித உரிமை மீறல்கள் தடுக்கப்படவுமில்லை. இப்பொறிமுறைகளின் வேலை முறைகளும் சுயாதீனமும் தொடர்பில் காத்திரமான கேள்விகளும், சாட்சிகளையும் பலியானவர்களையும் பாதுகாப்பதற்கு நம்பகமான செயல்திட்டமொன்று இல்லாமை தொடர்பில் கடுங் கவலைகளும் எழுப்பப்பட்டுள்ளன.


இந்த ஆணைக்குழுக்கள் தொடர்ந்து இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களில் கவனஞ்செலுத்தத் தவறிவிட்ட வெறும் அடையாளமான வெற்றுச் சைகைகள் என்பதுதான் எமது பிரதான கவலை. 2008 ஏப்பிரலில் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு (ஐஐபுநுP), “உண்மைக்கான ஒரு தேடுதலை ஆதரிப்பதற்கு அரசியல் துணிவு இல்லாமையை” சுட்டிக்காட்டி அவதானிகளென்ற தமது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தின் முதலாவது விருப்பத்தெரிவுக்கான வரைவேட்டுக்கு இலங்கை அரசாங்கத்தின் இசைவு அரசியலமைப்புக்கு ஒவ்வாததும் சட்டப்படி செல்லுபடியற்றதுமெனத் தெரிவித்து இலங்கையின் உயர் நீதிமன்றம் 2006இல் வழங்கிய ஒரு தீர்ப்பின் விளைவாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இலங்கையின் கடப்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன. இது மனித உரிமைத் துர்ப்பிரயோகங்களுக்குப் பலியானவர்களும் அவற்றிலிருந்து எஞ்சிப்பிழைத்தவர்களுமான இலங்கையரை மனித உரிமைகள் குழு அணுகுவதற்கான வாய்ப்பை அகற்றியதன் மூலம் தண்டனை விலக்கீட்டுச் சூழலுக்குப் பங்களித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் கவுன்சிலுடன் அதன் ஒத்துழைப்பின் ஓர் அளவீடாக, மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் 2007இல் இலங்கைக்கு வருகை தந்ததையும் கவுன்சிலின் பல்வேறு பொறிமுறைகளின் வரவையும் சுட்டிக்காட்டுகின்றது. எனினும் இந்த வருகைகளின் முடிவில் செய்யப்பட்ட விதப்புரைகளுக்கு அரசாங்கத்தின் பதிலளிப்பு பெரும்பாலும் மறுப்பானதாகவும், சில சமயங்களில் எதிர்ப்பானதாகவும் கூட இருந்துள்ளது. இலங்கையில் களத்தை அடிப்படையாகக் கொண்ட, அதிகரித்த மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பிரசன்னத்தின் ஊடாகத் தள நிலைமையின் சுயாதீனமான சர்வதேசக் கண்காணிப்பு வேண்டுமென்ற உயர் ஆணையாளரினதும் கவுன்சிலின் விசேட பொறிமுறைகள் எல்லாவற்றினதும் நிலைமாறாத அறைகூவல் பெரிதும் வாதத்துக்குரிய விடயமாக விளங்கியது. இலங்கை அரசாங்கம் இந்தக் கோரிக்கையைத் திரும்பத்திரும்ப நிராகரித்ததுடன், மனித உரிமைகளைக் கண்காணிப்பதற்கான பயனுறுதியுள்ள தேசியப் பொறிமுறைகள் ஏற்கனவே உள்ளனவென்றும் அவற்றுக்குத் தொழில்நுட்ப ஆதரவு மட்டும்தான் தேவையென்றும் வாதிட்டது.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் உறுப்புரிமைக்கான தரங்களை நிறைவேற்ற இலங்கை தவறியுள்ளதென நாம் உறுதியாக நம்புகின்றோம். அத்துடன் இலங்கை அரசாங்கம் சர்வதேச நுண்ணாய்விலிருந்து அதனைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மனித உரிமைக் கவுன்சிலில் அதன் உறுப்புரிமையைப் பயன்படுத்தியுள்ளது. எனினும், இக்கட்டத்தில், சர்வதேச நுண்ணாய்வு மட்டும் தான் மேலும் மீறல்களிலிருந்து எமது நாட்டின் சிவிலியன் குடிசனத்தைப் பாதுகாக்க முடியும். எனவே இந்நாட்டில் நிலவும் பாரதூரமான மனித உரிமைத் துர்ப்பிரயோக நிலைக்கு இலங்கை அரசாங்கத்தை வகைப்பொறுப்புடையதாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக மனித உரிமைக் கவுன்சிலுக்கான தேர்தல் செயல்முறையைப் பயன்படுத்தும் படி ஐ.நா. உறுப்பு நாடுகள் எல்லாவற்றையும் நாம் வற்புறுத்துகின்றோம்.

இவ்வாண்டு இலங்கையின் மீள்தெரிவுக்கான ஆதரவை மறுப்பதற்கு எண்ணிப்பார்க்கும்படி நாம் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அவ்வாறு செய்வதன் மூலம், இலங்கை அரசாங்கம் ஐ.நா. போன்ற சர்வதேச நிறுவனமொன்றில் சமமான பங்காளியாகத் தொடர வேண்டுமாயின் அதன் வழக்கங்களை அது சீர்திருத்திக் கொள்ள வேண்டுமென்று இலங்கை அரசாங்கத்துக்கு உங்கள் அரசாங்கம் ஒரு காத்திரமான செய்தியை அனுப்பும். அரசியல் துணிவின்றித் தொழில்நுட்ப உதவி இலங்கையில் மனித உரிமை நிலைமையில் பயனுறுதியுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

தற்போதைய சூழ்நிலைகளில் மனித உரிமைக் கவுன்சிலுக்கு இலங்கையை மீளத் தெரிவு செய்தலானது எமது நாளாந்த வாழ்வின் ஒரு பகுதியாகிவிட்ட சனநாயக விரோத வழக்கங்களுக்கு ஆதரவளிப்பதாக முடியும். மனித உரிமைக் கவுன்சிலுக்கு மீளத் தெரியப்படுவதற்கான இலங்கையின் முயற்சியை நீங்கள் நிராகரித்தலானது சர்வதேச சமூகத்தின் மீது இலங்கைச் சிவில் சமுதாயம் வைத்துள்ள விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்துமென்பதுடன் இந்நாட்டில் சீர்திருத்தங்களுக்கான மிகப்பலமான ஒரு தூண்டுவிசையாகவும் செயற்படக் கூடும்.

கையொப்பமிட்ட சிவில் சமுதாய அமைப்புக்கள்

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
~இன்போர்ம்| மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையம்
பாகுபாட்டுக்கும் இனவாதத்துக்கும் எதிரான சர்வதேச இயக்கம்
மனித உரிமைகளுக்கும் சனநாயகத்துக்குமான மன்னார் பெண்கள்
முஸ்லிம் தகவல் நிலையம்
இப்போதே உரிமைகள் - சனநாயகத்துக்கான கூட்டமைவு

No comments: