Saturday, 24 May 2008

பிள்ளையான் குழுவிடமிருந்து ஆயுதங்களைக் களைந்தாலேயே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு "காத்தான்குடியில்" ஹிஸ்புல்லா தெரிவிப்பு


பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்களைக் களைவதன் மூலம் மட்டுமே கிழக்கில் முஸ்லிம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று கூறுகிறார் கிழக்கு மாகாண அமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா.

அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட காத்தான்குடியில் மீரா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தொழுகையை அடுத்து அங்குள்ள மக்கள் மத்தியில் கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களையச் செய்வதற்குத் தாம் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும், இது தொடர்பாக அரசுடனும், பொலிஸ் மா அதிபருடனும் தாம் பேசியிருக்கின்றார் எனவும் அங்கு அவர் கூறியிருக்கின்றார்.

இதேபள்ளிவாசலுக்கு நேற்று மதியம் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானும் நேரில் சென்று முஸ்லிம் மக்களைச் சந்தித்து உரையாடினார்.

அதற்கு முன்னரே முதலமைச்சர் பிள்ளையான் அங்கு வருவதற்கு முன்பே ஹிஸ்புல்லாவின் உரை முடிவுற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு ஹிஸ்புல்லா மேலும் கூறியவை வருமாறு: காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் கவலைக்குரியது. இச்சம்பவம் மூலம் மூன்று முக்கிய உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.

நிலைமையை வழமைக்குக் கொண்டு வருவதற்கான ஒழுங்குகள் குறித்து நான் முதலமைச்சர் பிள்ளையானுடன் தொலைபேசியில தொடர்புகொண்டு பேசியிருக்கின்றேன்.

இச்சம்பவத்திற்கு பிள்ளையான் என்னிடம் மன்னிப்புக் கோரினார்.

கிழக்கில் முஸ்லிம்களின் விவகாரத்தை நானும் தமிழர் விவகாரத்தை பிள்ளையானும் கையாள்வதற்கு நாம் எங்களுக்குள் முடிவெடுத்திருக்கிறோம்.

மூன்று முஸ்லிம்களின் உயிர்களை நாம் இழந்துள்ளோம். முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளமையை இது உணர்த்துகின்றது.

90 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகளைத் தொடர்ந்து முஸ்லிம்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்படவேண்டியதன் தேவை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் உணரப்பட்டது.

இப்போது மீண்டும் அந்தத் தேவை உணரப்படுகிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் சம்பவத்தையடுத்து நாம் பொறுமை காக்க வேண்டும். தமிழர் முஸ்லிம்கள் உறவுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு நாம் செயற்பட வேண்டும்.

பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்களுக்கு அரசால் பாதுகாப்பு வழங்கப்பட்டால் மாத்திரம்தான் கிழக்கில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

அவர்களின் ஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். அரசுடனும், பொலிஸ் மா அதிபருடனும் இது தொடர்பாக நான் பேசியிருக்கிறேன்.

அது மாத்திரமின்றி கடந்த 06 நாட்களுக்குள் 04 பொலிஸார் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது இங்கு அசாதாரண சூழல் நிலவுவதையே காட்டுகிறது.

பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களைவதன் மூலமே எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும். அதற்கான நடவடிக்கையை நான் தொடர்ந்து மேற்கொள்வேன். என்றார்.

No comments: