Saturday, 24 May 2008

தன் அணியினர் படுகொலைக்குக் கண்டனம்முஸ்லிம்கள் படுகொலைக்கு அனுதாபம்:பிள்ளையான்


தன் அணியினர் படுகொலைக்குக் கண்டனம்முஸ்லிம்கள் படுகொலைக்கு அனுதாபம்:பிள்ளையான்




கிழக்கு மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), முதலமைச்சர் என்ற முறையில் பொதுமக்களுக்கான தமது முதலாவது அறிக்கையை நேற்று வெளியிட்டார்.
காததான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அசம்பாவிதத்தை ஒட்டியதாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் காத்தான்குடியில் தமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரு உறுப்பினர்கள் ஆயுதக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார்.
அதேநேரம், அங்கு ஏற்பட்ட அசம்பாவிதங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை அவர் தெரிவித்துக்கொண்டார்.
பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் தொனி அவரது அறிக்கையில்
இடம்பெற்றிருக்கவில்லை.
"அன்பார்ந்த தமிழ் பேசும் மக்களே!' என்று விளிக்கப்பட்டு முதலமைச்சர் சி.சந்திரகாந்தனினால் ஒப்பமிட்டு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:
காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இரு உறுப்பினர்கள் ஆயுதக்குழுவினரால் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடும் அனைத்து
மக்களின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அழிவடைந்த கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்பும் ஒரு சந்தர்ப்பம் இருபது வருடங்களின் பின் எமக்குக் கிடைத்துள்ளது. இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்ய மூவின மக்களிடையே புரிந்துணர்வும் சகவாழ்வும் முக்கியமானது.
ஆனால் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துள்ள எமது கட்சி உறுப்பினர்கள் மீது நடத்தப்படுகின்ற இவ்வாறான தாக்குதல்கள் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையைச் சிதைப்பதுடன் தமிழ் முஸ்லிம் உறவைச்
சீர்குலைக்க எத்தனிக்கும் நாசகார சக்திகள் இந்த மண்ணில் வெற்றியடையவே வழிவகுக்கும்.
கிழக்குமாகாணம் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் எமதுமக்கள் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையுடன் இங்கு வாழ்கின்றார்கள். மக்கள் சுதந்திரமாக நடமாடவும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தமது அரசியல் உரிமையைப் பேணவும் உரித்துடையவர்கள்.
இவற்றைக் குழப்புவதற்கு முனையும் எந்தச் சக்தியாயினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இல்லாவிடில் இன ஒற்றுமையை இந்த மண்ணில் நாம் கட்டியெழுப்பமுடியாது. எமது கட்சி உறுப்பினர்கள் மீது இடம்பெற்ற
இத்தாக்குதலை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர நான் விரும்புகின்றேன்.
அங்கு ஏற்பட்ட அசம்பாவிதங்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் சட்டத்தையும், ஒழுங்கையும் இப்பகுதியில் நிலைநாட்டஉதவிய பாதுகாப்புப்படையினருக்கு எனது நன்றிகள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: