Friday, 16 May 2008

கிழக்கு மாகாணசபை தேர்தல் முடிவடைந்த பின்னரும் ரிஎம்விபியினரின் வன்முறைக்கு இலக்காகி வரும் மக்கள்.. தேர்தல் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள்

கிழக்கு மாகாணசபை தேர்தலில் தாம் அமோக வெற்றிபெற்றுவிட்தாக தெரிவித்துவரும் ரிஎம்விபி கட்சியினர் தேர்தலில் தமக்கு ஆதரவளிக்காது இதர கட்சிகளுக்கு ஆதரவளித்த பொதுமக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.


ஒரு புறத்தில் ஜனநாயக வழிக்கு வந்திருப்பதாக பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துக்கொண்டு ஏனைய அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களை அடக்கி, ஒடுக்கி தமது ஏக அதிகாரத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் வன்முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் விரும்பும் அமைதி, இயல்புநிலை, ஜனநாயகம் எட்டப்பட முடியாது போகும். இங்கு நடப்பவற்றை முழுமையாக தெரிந்துகொள்ளாமல் வெளிநாடுகளில் சௌகரியமாக இருந்துகொண்டு மக்களின் அபிலாஷைகளை உய்த்தறிந்து கூறுபவர்கள், விமர்சனம் என்ற பேரில் எழுதுபவர்கள் இந்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துவது நல்லது. இல்லையேல் மக்கள் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக முடியலாம்.


தேர்தல் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள்:


10.05.2008 அன்று மட்டக்களப்பு புது}ர் பகுதியில் வசிக்கும் ஈபிடிபி கட்சியை சேர்ந்த எஸ்.ரஞ்சனி என்ற பெண்ணின் வீட்டுக்கு சென்ற ரிஎம்விபி கட்சியினர் அவரை தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். அவரது தலையில் 12 தையல் பேடப்பட்டுள்ளது.


13.05.2008 அன்று நள்ளிரவு கொக்கட்டிச்சோலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்பட்ட ஒருவரது கடை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

13.05.2008 அன்று முதலைக்குடாவில் உள்ள பத்மநாபா ஈபிஆர்எல்எவ் அங்த்தவர் ஒருவரது சகோதரிக்கு சொந்தமான எம்.ஆர்.எஸ். கவிந்தினி அரிசி ஆலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.


12.05.2008 அன்று காலை 7 மணியளவில் கல்லாறு பகுதியில் ரட்ணசிங்கம் சுபதாஸ் என்பவர் தடுத்துவைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ச.குகநாதனுக்கு ஆதரவாக செயற்பட்டவர். ரிஎம்விபி அமைப்பை சேர்ந்த செந்து}ரன் குழுவினரே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.


13.05.2008 அன்று பகல் 2 மணியளவில் கல்லாறு பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதியான நடராஜா ஜீவநாயகம் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு காயங்களுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.


14.05.2008 அன்று கல்லாறு பகுதியில் சிவகுரு சிவஞானம் தடுத்துவைக்கப்பட்டு தாக்கப்பட்ட பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.


No comments: