Wednesday, 21 May 2008

மலேரிய நுளம்புகளுக்கு மருந்து கொடுக்கும் பயனற்ற அமைச்சுப் பதவியே ஹிஸ்புல்லாக்கு கிடைக்குமாம்

அமைச்சு பதவி தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படாமையினால் ஹிஸ்புல்லாவின் பதவியேற்பு தாமதம்

அமைச்சு பதவிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக ஹிஸ்புல்லாவின் பதவிப் பிரமாணம் தாமதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இன்றைய தினம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக ஹிஸ்புல்லா பதவியை பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், சுகாதார அமைச்சுக்குப் மேலதிகமாக வழங்கப்படவுள்ள அமைச்சுப் பதவிகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக பதவியேற்பு வைபவம் தாமதமடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம் விவகாரம் மற்றும் அபிவிருத்திப் போன்ற அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு பிள்ளையான் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

எனினும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சுப் பொறுப்பும் தமக்கு வழங்கப்பட வேண்டும் என ஹிஸ்புல்லா கோரிக்கை விடுத்ததனைத் தொடர்ந்து இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரபால சிறிசேன, அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா ஆகிய ஆளுங்கட்சி குழுவினருக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றதாகத் தெரியவருகிறது.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது தமக்கு கல்வி அமைச்சு வழங்கப்பட வேண்டும் என ஹிஸ்புல்லா கேட்டுக் கொண்டதாகத் தெரியவருகிறது.

இந்தக் கோரிக்கை தொடர்பாக ஆளுங்கட்சி குழுவினர் தற்போது ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 1000 பாடசாலைகளில் 800 பாடசாலைகள் தமிழ் மொழி மூலமாக பாடசாலைகளாகும். எனவே சிங்களவர் ஒருவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டமை நியாயமற்றதென ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.

காணி தொடர்பான அமைச்சுப் பதவியை சிங்களவர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்தும் ஹிஸ்புல்லா அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், ஹிஸ்புல்லாவின் கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால் இன்று மாலை பதவியேற்பு நடைபெறும் எனத் தெரியவருகிறது.

இதேவேளை, அமைச்சுப் பதவிகளை கேட்டு ஹிஸ்புல்லா ஜனாதிபதியின் பின்னால் சென்ற போதிலும் மலேரிய நுளம்புகளுக்கு மருந்து கொடுப்பது போன்றதொரு பயனற்ற அமைச்சுப் பதவியே அவருக்கு கிடைக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

No comments: