கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பால் பண்ணையாளர்களுக்கு உதவும் பொருட்டு, யு.எஸ்.எய்ட் நிறுவனத்தினால் பால் குளிரூட்டும் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் ஜனநாயக, மனிதாபிமான உதவிகளுக்கான உதவி நிருவாகி மைக்கேல் ஹெஸ் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் இந்நிலையத்தை திறந்து வைத்தார்.
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தத்தினால் முழுமையாக அழிவடைந்த பகுதியிலேயே தற்போது இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 2,000 குடும்பங்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தடன், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமான 'வேர்ல்ட் கொன்சேர்ன்' மற்றும் மில்கோ நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து யு.எஸ்.எய்ட் 40 கொட்டில்களையும், 5 பால் சேகரிப்பு நிலையங்களையும் இதற்கு மேலதிகமாக நிர்மாணித்துள்ளது.
அத்துடன் பால் பண்ணையாளர்களுக்கு 300 பால் குவளைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், 160 விவசாயிகளுக்கு விலங்குப் பராமரிப்பு மற்றும் வியாபார திட்டமிடல்கள் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உதவித் திட்டத்தின் மூலம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக மைக்கேல் ஹெஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களிலுள்ள ஏனைய பகுதிகளுக்கும் தமது திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் எனவும் ஹெஸ் உறுதியளித்துள்ளார்.

No comments:
Post a Comment