Wednesday, 21 May 2008

`சுயநல அரசியலுக்காக முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அமைச்சர் அதாவுல்லா துரோகமிழைத்துள்ளார்'

முஸ்லிம் சமூகத்திற்கு துரோகமிழைத்த அமைச்சர் அதாவுல்லாஹ்வை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது . மனிதன் மன்னிக்காத வரையும் இறைவன் ஒரு போதும் மன்னிக்கமாட்டான். தனது சுயநல அரசியல் நலனுக்காக முழு முஸ்லிம் சமூகத்திற்கும் காலாகாலமாக துரோகமிழைத்துவரும் அதாவுல்லாஹ்வை முஸ்லிம் சமூகத்தின் துரோகியாக பிரகடனம் செய்வோம் என்று, கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம், என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு நிலத் தொடர்புடைய ஒரு முஸ்லிம் மாகாண அலகினை வழங்க வேண்டும் என மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முன்வைத்தார்கள். அவரது எண்ணக்கருவினை தனது சுயநல அரசியலுக்காக பேரினவாத சக்திகளுடனும் முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இஸ்ரவேலர்களின் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்துடனும் கைகோர்த்துக் கொண்டு வடக்குக் கிழக்கை பிரிக்க வேண்டும் என கோஷமெழுப்பி வந்ததோடு ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பேரினவாதிகளைத் தூண்டிவிட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல வைத்து வடக்கையும் கிழக்கையும் வேறு வேறாக பிரித்ததனூடாக முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்கவிருந்த நிலத்தொடர்புள்ள முஸ்லிம் மாகாண அலகினைக் கிடைக்காத வண்ணம் தகர்த்தெறிந்தவர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதித் தினத்திற்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக் குரலான ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தையும் கட்சியின் தலைவர், செயலாளர் கையொப்பமிட முடியாதவாறு நீதிமன்றத் தடை உத்தரவை கொண்டு வந்ததன் மூலம் முஸ்லிம் விரோத சக்திகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதோடு எமது கிழக்கு மண்ணின் முஸ்லிம் பிரதேசங்களின் உள்ளூராட்சி சபை அதிகாரங்களை பேரினவாதிகளுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார்.

அத்தோடு நின்றுவிடாமல் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்களையோ முதலமைச்சர் பதவியினையோ பெற்றுவிடக் கூடாதென்பதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு முற்றிலும் எதிராக செயற்பட்டு வரும் பிள்ளையான் குழுவிற்கு கிழக்கு மாகாண சபையின் அதிகாரங்களையும் முதலமைச்சர் பதவியினையும் பெற்றுக் கொடுப்பதற்காக முஸ்லிம்களின் வாக்குகளை கபடத்தனமாக பெற்றுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தனது சுயநல அரசியல் நலனுக்காக முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவியினை பிள்ளையானுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியதோடு தனது சகாக்களான ஐந்து மாகாண சபை உறுப்பினர்களையும் ஆதரவாகச் செயற்படுமாறு பணித்துள்ளதுடன் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதற்கு தமிழ் , முஸ்லிம் கலவரமேற்படுவதற்கும் காரணமாக இருந்து முஸ்லிம் சமூகத்திற்கு துரோகமிழைத்துள்ளார்.

எதிர்காலத்தில் அமைச்சர் அதாவுல்லாஹ்வோடு எதுவித அரசியல் தொடர்புகளும் வைத்துக் கொள்ளாது கடந்த காலத்தில் அமைப்பாளர்களாகவும் இணைப்பாளர்களாகவும் செயற்பட்டவர்கள் உடன் விலகிக் கொள்ளுமாறு முஸ்லிம் சமூகத்தின் பேரால் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

ttpian said...

are allah!
Allah will not forgive these people!