Thursday, 15 May 2008

தேர்தல் முடிவடைந்த இரு நாட்களிலேயே தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கிறது பேரினவாதம்

* தடுத்து நிறுத்துமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழைப்பு

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவடைந்த இருநாட்களிலேயே தமிழ், முஸ்லிம்களின் காணிகளை பேனவாதம் விழுங்க ஆரம்பித்திருப்பதாகக் கடும் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ள ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முதலமைச்சர் பதவிக்காக மோதுவதை நிறுத்தி விட்டு நில ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த ஒன்றுபடுமாறு முஸ்லிம் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

இது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்திருப்பதாவது;

பதவியிலிருக்கும் தற்போதைய அரசாங்கம் தமக்கு சாதகமானவர்களிடமே கிழக்கு அதிகாரம் செல்ல வேண்டுமென ஆவல் கொண்டிருந்தது. அதன்படியே விடயங்கள் இடம்பெற்றுள்ளன. நில ஆக்கிரமிப்பை எதிர்க்காத சக்திகளை முதலமைச்சராக்குவதுதான் அரசாங்கத்தின் திட்டமாகும்.

அவ்வாறான முதலமைச்சர் தான் சிங்களப் பேரினவாதத்திற்கு தலை வணங்கி தமிழ், முஸ்லிம் மக்களின் காணி அபகரிக்கப் படுவதை கண்டும் காணாமலும் இருப்பார்.

கிழக்குத் தேர்தல் முடிவடைந்த 2 நாட்களிலேயே சிங்களப் பேரினவாதம் தமிழ் பேசும் மக்களின் காணிகளை விழுங்க ஆரம்பித்துவிட்டது. முஸ்லிம்களின் காணிகளைப் புனிதப் பிரதேசங்களெனக் கூறி தேர்தலுக்குப் பின்னர் எல்லையிட்டு இருக்கிறார்கள். கடல்கோளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கட்டப்படவிருந்த வீடமைப்புத் திட்டத்திற்கும் ஹெல உறுமய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

ஹெல உறுமய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி. முஸ்லிம் அமைச்சர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை வாபஸ்பெறச்செய்ய வேண்டும். இது முஸ்லிம் அமைச்சர்களுக்கான எமது சவாலாகும்.

முதலமைச்சர் பதவிக்காக மோதுவதைக் கைவிட்டுவிட்டு நில ஆக்கிரமிப்பிலிருந்து கிழக்கு மாகாணத்தைக் காப்பாற்ற உதவுமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.

தற்போது நடைபெறும் முதலமைச்சருக்கான போட்டி இருசமூகங்களுக்கிடையேயானதல்ல. மாறாக இது இரு தனிநபர்களுக்கிடையேயானது. இதுபற்றி தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கவலையடையவில்லை என்றார் அவர்.

No comments: