Wednesday, 14 May 2008

வடக்கு, கிழக்கு துண்டாடப்பட்டதை அரசியல் ரீதியாக உறுதிப்படுத்துவதற்கு நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தல்

10.05.2008 ஆம் திகதி நடத்தப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமக்கு கிடைத்தது அமோக வெற்றியென அரசாங்கத் தரப்பினர் மார்தட்டுகின்றனர். வெற்றிக் களிப்பில் ஜனாதிபதி ராஜபக்ஷ குதூகலமடைந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (ஐ.ம.சு.மு.) அர சாங்கத்தின் கொள்கைகளை கிழக்கு மாகாண மக்கள் ஏற்றுள்ளதோடு, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதன் மூலம் சமாதானம் மலர்ந்து நாட்டில் ஜனநாயகமும் அபிவிருத்தியும் வலுவூட்டப்பட வேண்டும் என்பதற்கான தெளிவான ஆணையை கிழக்கு மக்கள் வழங்கியுள்ளதையே தேர்தல் பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றன என ஜனாதிபதி கருத்துத் தெரிவித்ததாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

எனவே, நீதித்துறையினூடாக தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு துண்டாடப்பட்டதை, பேரினவாத இறுமாப்புடன், அரசியல் ரீதியாக உறுதிப்படுத்துவதற்கு ஜனநாயகம் எனும் போர்வையிலேயே சென்ற 10 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. எனவேதான், அத்தேர்தல் குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கணிசமானளவு விரிசல்களை உண்டுபண்ணவல்லதாகையால் அது விசமத்தனமானதும் மோசடியுமானதாகையால் அரசாங்கத்தின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்குப் பலியாகக் கூடாது எனவும் அதனை உண்மையான நேர்மையான ஜனநாயக சக்திகள் பகிஷ்கரிக்க வேண்டும் எனவும் நாம் ஏற்கனவே மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தோம். ஏனென்றால், வெற்றி நிச்சயம் என எவ்வளவுதான் எதிரணியினர் முழக்கம் செய்தாலும் கூட அரச தரப்பினர் தமது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து வளங்களையும் வசதிகளையும் அபரிமிதமாகப் பயன்படுத்துவர் என்பது வெள்ளிடைமலைபோல் தெரிந்த விடயமாகும். தேர்தல் முடிவு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியென அரசாங்கம் பறைசாற்றுகின்றதென்றால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜே.வி.பி.யினர் துணைபோனதாகவே வரலாறு இந்த நிகழ்வைப் பதிவு செய்து கொள்ளும். ஐ.தே.க.வும் ஒரு பேரினவாத நோக்குடைய கட்சி என்பதை ஒருபோதும் தமிழ் பேசும் மக்கள் மறந்துபோகக் கூடாது. அந்த வகையில் கடந்த தேர்தலில் ஐ.தே.க.வுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இறுதிவேளையிலாயினும் வேண்டுகோள் விடுத்ததைத் தவிர்த்து இந்த மோசடியான தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமெனும் சுலோகத்தினையே ஏந்தி நின்றிருக்க வேண்டும். ஏனென்றால், ஐ.தே.க.வும் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒருபோதும் உருப்படியான அர்த்தபுஷ்டியான அணுகுமுறை எதுவுமின்றி அரைவேக்காடான தீர்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியும் மோசமான தேர்தல் மோசடிகளைச் செய்தும் வந்துள்ளமை வரலாறு. 1981 இல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மாவட்ட சபைத் தேர்தல் அதற்கு நல்லதொரு உதாரணமாகும். முதலாவதாக அந்த மாவட்ட சபைத் திட்டம் தமிழரைப் பொறுத்தவரை எதுவித பயனுமற்ற பூச்சாண்டியாகக் காணப்பட்டது. அந்த வகையில் அதனை தமிழ் மக்கள் நிராகரிப்பதோடு தேர்தலையும் பகிஷ்கரிக்க வேண்டுமென குறிப்பாக நவசமசமாஜக் கட்சியினர் பருத்தித்துறை வரை சென்று பிரசாரம் செய்தனர். ஆனால், மறுபுறத்தில் மாவட்ட சபைகளுக்கு ஏறத்தாழ 15 அமைச்சுகளின் கீழான அதிகாரங்கள் கிடைக்கப்படவுள்ளதாக காரணம் கற்பித்து அதனை ஏற்றுக் கொண்டு பிரசாரம் செய்து தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் பங்குபற்றியது.

அத்தேர்தலை நடத்துவதற்கு பெருந்தொகையான அதிகாரிகள் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்டிருந்தனர். காலஞ்சென்ற ஐ.தே.க. அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியூ போன்றோர் யாழ்.நகரில் முகாமிட்டு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் நடைபெறுவதற்கான தறுவாயிலேயே தமிழரின் அரும் பொக்கிசமாகிய யாழ். நூலகம் எரியூட்டி சாம்பராக்கப்பட்டது. அடுத்து இடம்பெற்ற தேர்தலில் பலத்த மோசடிகள் இடம்பெற்றன. சில வாக்குப்பெட்டிகள் கூட மாயமாக மறைந்து போய்விட்டன. இத்தகையதொரு வரலாற்று நிகழ்வினை வெறுமனே கடந்த கால சம்பவமென்று யாரும் புறந்தள்ளி விட முடியாது.

ஏறத்தாழ கடந்த 3 தசாப்த கால இலங்கை அரசியல் வரலாற்றில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் என்பது இருந்ததில்லையென்றே கூறலாம். மாறாக, தேர்தல் மோசடிகள், ஊழல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளன. அதன் ஒரு உச்சக்கட்டமாகவே சென்ற 10 ஆம் திகதி நடத்தப்பட்ட கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நோக்க வேண்டியுள்ளது. அது ஒரு `ஜனநாயக கண்காட்சி' என 23.04.2008 எழுதிய வாராந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அத்தேர்தல் ஒரு பகற்கொள்ளையென ஐ.தே.க.- மு.கா. கூட்டமைப்பினர் சென்ற திங்கட் கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அறைந்துள்ளனர். அந்த மோசடிக்கெதிராக ஜனநாயகத்திற்கும் இறைமைக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கெதிராக வீதியிலிறங்கிப் போராட்டம் நடத்தப்போவதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் இருவரும் சூளுரைத்துள்ளனர். ஒருபுறத்தில் இவர்கள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்குத் தேவையான சான்றிதழை வழங்கிவிட்டனர். அதாவது கிழக்கை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டு தேர்தலை விரைந்து நடத்தி ஜனநாயகத்தை அப்பிராந்திய மக்களுக்கு மீள வழங்கியுள்ளோம், தேர்தலில் பிரதான எதிர்க் கட்சியும் பங்குபற்றியுள்ளது என்றெல்லாம் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச ரீதியாக பிரசாரம் செய்வதற்கு பெரிதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சர்வதேச அரங்குகளில் குறிப்பாக வெளிநாட்டமைச்சர் றோகித்த போகொல்லாகம மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கிழக்கில் சென்ற மார்ச் மாதம் மட்டக்களப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நீண்டகாலத்தின் பின்னர் நடத்தப்பட்ட நாள் முதல் ஜனநாயகம் செழித்து வளர்ந்து வருகின்றது என்றெல்லாம் பிரதானமான பிரசாரமாக மேற்கொண்டு வந்துள்ளனர்.

மறுபுறத்தில் ரணில்- ரவூப் இருவரும் வண்டிக்குப் பின்னால் குதிரையைப் பூட்டும் வகையிலேயே தேர்தலில் இடம்பெற்ற மோசடிகளை எதிர்த்து வீதியிலிறங்கப்போவதாக ஆவேசம் வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் பிரசாரத்திற்காக அமைச்சர்கள் அனைவரும் கிழக்கிற்கு படையெடுத்து நாட்கணக்காக முகாமிட்டு வெற்றியீட்டுவதற்கு தேவையான அத்தனை கைங்கரியங்களையும் செய்து முடித்தனர். இன்று மோசடிகள், அடாவடித்தனங்கள் யாவும் தேர்தல் செயற்பாடுகளில் ஒரு பகுதியாகிவிட்டனவா என சாதாரண மக்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பது பகிரங்க இரகசியமாய் உள்ளது. அண்டை நாடாகிய இந்தியாவில் உள்ளது போன்றதொரு வலுவான தேர்தல் ஆணையம் இலங்கையில் இல்லை என்பதை நாம் அறிவோம். இலங்கையில் தற்போதைய தேர்தல் ஆணையாளர் அவரின் விருப்பத்திற்கு மாறாக நீண்டகாலம் அப்பதவியை வகித்து வந்துள்ளார். அவர் ஓய்வுபெற்று செல்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்திருந்தது. ஜனாதிபதி ராஜபக்ஷ 2005 டிசம்பரில் பதவியேற்றபோது தன்னை விரைவில் ஓய்வுபெற்றுச் செல்வதற்கு ஆவண செய்யுமாறு அவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார். உயர்பதவிகளுக்கு சுதந்திரமாக நியமனங்கள் வழங்குவதற்கு வாய்ப்பளிப்பதற்கு ஏதுவாய் உள்ளதாகிய அரசியல் அமைப்பின் 17 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்துவதில் இழுபறி ஏற்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்றும் அப்பதவியில் செயற்பட்டு வருகிறார்.

"20 வருடங்களுக்கு பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒன்றை ஜனநாயக ரீதியில் நடத்தி முடித்துள்ளோம். 3 மாவட்டங்களிலும் பாரிய சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. சிறிய சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க கிடைத்தமையையிட்டு மனநிறைவு கொள்கிறேன்." இவ்வாறு தேர்தல் ஆணையாளர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முழுப்பூசணிக்காயை ஒரு கோப்பை சோற்றில் மறைக்கும் கதைபோலவே ஆணையாளரின் அறிக்கை காணப்படுகின்றது. அவர் மீது எதிரணியினர் கடுமையான விசனம் தெரிவித்துள்ளது ஒரு புறமிருக்க அவர் தீக்கோழிபோல் செயற்பட்டு விட்டார் என்றும் இவ்வாறாக தேர்தல்கள் முற்றுமுழுதாக கேலிக்கூத்தாகிவிட்டனவா என்ற அங்கலாய்ப்பும் மக்கள் மத்தியில் எழவே செய்கின்றது.

முதலமைச்சர் பதவி கயிறிழுப்பு

இவை அனைத்திற்கும் அப்பால் முதலமைச்சர் தெரிவில் எழவுள்ள சர்ச்சை மோசமான விளைவுகளுக்கு இட்டுச் செல்ல வாய்ப்புண்டு என்ற அச்சம் காணப்படுகின்றது. பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? என்றிருந்த சர்ச்சை கயிறிழுப்பு விவகாரமாகிவிட்டது. இத்தகைய பிரச்சினை தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பாரிய விரிசல்களை ஏற்படுத்தும் அபாயம் உண்டு என்பதை நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். இன்றைய நிலையில் சிங்கள அமைச்சர்கள் பிள்ளையான் சார்பாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் ஹிஸ்புல்லா சார்பாகவும் காய்கள் நகர்த்திக்கொண்டிருப்பதாக அறியக்கிடக்கிறது. இந்த விவகாரம் பாரிய அசம்பாவிதங்களுக்கு இட்டுச் சென்றால் அதற்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நிற்க எவர் முதலமைச்சராகப் பதவி வகித்தாலும் சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் ஒற்றையாட்சி முறைமைகயின் கீழேயே காரியங்கள் நடந்தேறப்போகின்றன. ஆயினும், கிழக்கு மாகாணத்தின் அதிமுக்கியமான வளங்கள் அந்நிய சக்திகளிடம் கைபறியக்கூடாது என்பது பிரதானமானதாகும்.

No comments: