Thursday, 22 May 2008

கிழக்கில் இன ஒற்றுமை ஏற்படவேண்டும்- ஹிஸ்புல்லா

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டு இனங்களுக்கிடையே சுமுகமான உறவு நிலவ வேண்டுமென கிழக்கு மாகாணத்தின் அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் சுகாதாரம், சுதேச மருத்துவம், சமூக சேவைகள், சமூக நலன், சிறுவர் நன்னடத்தை, மகளிர் விவகாரம், இளைஞர் அலுவலக விவகாரம், விளையாட்டுத்துறை, வேலை வாய்ப்பு, தகவல் தொழில்நுட்பவியல், கல்வி, கூட்டு அபிவிருத்தி, உணவு வழங்குதல் சம்பந்தமான அமைச்சராக தன்னை ஜனாதிபதி நியமித்திருப்பதாக ஹிஸ்புல்லா ஊடகங்களுக்குக் கூறினார்.

இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஹிஸ்புல்லா பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் கருஜயசூரிய, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜவாகர் சாலி மற்றும் முகமட் சுபைர் ஆகியோரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாக இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நாட்டு நிலைமையைக் கருத்தில்கொண்டே தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானித்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட்டு இனங்களுக்கிடையே சுமுகமான உறவு நிலவ வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் 3 தினங்களில் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளதாகவும், மேற்படி அமைச்சுக்களினூடாக சிறப்பான சேவையை கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: