Monday, 19 May 2008

வரலாற்று புகழ்மிக்க பெரியகல்லாறு கடல் நாச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு

வா. கிருஷ்ணகுமார்

கிழக்கிலங்கையின் தொன்மையான வழிபாட்டுத் தெய்வங்களில் ஒன்றாக போற்றப்படும் கடல்நாச்சியம்மன் ஆலய சடங்குகள் வைகாசிப் பூரணையில் அடுத்துவரும் திங்களில் வெகு விமர்சையாக இடம்பெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே அமைந்துள்ள மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையாக் கருதப்படும் கல்வியாறு என போற்றப்படும் பெரியகல்லாறு பிரதேசத்தில் அருள்பாலித்துவரும் கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒருநாள் சடங்கு இன்று திங்கட்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

அந்த வகையில் இந்த கடலம்மன் வழிபாடு தமிழகத்தில் இருந்து முதன் முதலாக பெரிகல்லாற்றிலேயே காலூன்றியதாக சுமார் 250 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட கடல்நாச்சியம்மன் தொடர்பான இலக்கியப் பாடல் ஒன்று கூறுகின்றது.

கண்டந்தக் கன்னியர் கப்பலேறிக் கல்லாறு மட்டக்களப்பில் இறங்கி வந்தாள் கன்னியர் வந்தாள் மழைமாரி பொழிந்திட வந்தாள் வந்தாள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு இடங்களில் காணப்படும் இந்தக் கடல்நாச்சியம்மன் வழிபாடானது பெரியகல்லாறு பிரதேசத்திலேயே முதன் முதலாக தோற்றம்பெற்றதாக மேல் உள்ள இலக்கிய கால பாடல் கூறுகின்றது.

சுமார் 350 வருடங்களுக்கு முன்னர் தற்போது கோயில் அமைந்துள்ள பகுதி காடு நிறைந்து காணப்பட்டதாகவும் அப்பகுதியில் இருந்த நீர் நிலையான ஓடக்கரையில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுவந்ததாகவும் வரலாறு கூறுகின்றது.

இவ்வாறான நிலையில் ஒருநாள் மீனவர் ஒருவர் இப்பகுதியில் மீன்பிடிக்கவந்தவேளையில் அப்பகுதியில் உள்ள அரச மரத்தடியில் பெண்ணொருவர் தனிமையில் இருப்பதைக்கண்டுள்ளார். அப்போது அப்பெண்ணிடம் சென்று அம்மா நீங்கள் யார்? ஏன் இங்கு தனிமையில் இருக்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார்.அதற்கு அந்தப் பெண் நான் வந்த வழியில் பசிக்களையால் இங்கு தங்க நேரிட்டது. கொஞ்சம் சாப்பாடு தரமாட்டாயா? எனக்கேட்டுள்ளார். அதற்கு மீனவனும் வாங்கள் அம்மா எங்கள் வீட்டுக்குப் போவோம், அங்கு சாப்பாடு இருக்கின்றது. சாப்பிட்டுவிட்டுவரலாம் என்று கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் என்னால் அங்கு வரமுடியாது கொஞ்சம் எடுத்துவரமாட்டாயாஎன தெரிவித்துள்ளார்.

சரி அம்மா இங்கே இருங்கள், நான் சென்று சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு மீனவர் வீட்டுக்குசென்றுவிட்டார். மீனவரும் சாப்பாட்டைக் கொண்டுவந்தபோது அந்தப்பெண் குறித்த இடத்தில் காணாது மீனவர் பதறிப்போனார். பசியில் இருந்தவர் சாப்பிடாமல் சென்றுவிட்டாரே என ஏங்கினார். அப்போது அப்பகுதியில் ஒரு அசரீரி கேட்டது, அப்பா நீ கவலைப்படாதே நான் எங்கும் போகவில்லை. இங்குதான் இருக்கிறேன். இதோபார் என் வீடு என்று சொல்லிக் கடலைப்பார்க்குமாறு கூறவும் என்ன ஆச்சரியம் கடலுக்குள் அழகான மாளிகையை அவர் கண்டார். அப்பா! என்னைச் சந்தித்த இடத்தில் சந்தித்த நாளில் வருங்காலத்தில் பொங்கிப்படைத்து என்னை அழைத்தால் நான் வருவேன் என அசரீரி கூறியது.

இதன்படி அந்த அம்மை வந்த தினமான வைகாசிப் பூரணையை அடுத்துவரும் ஒவ்வொரு திங்களும் அன்னைக்குப் பொங்கல் படைத்து வழிபட்டு வருகின்றனர். அன்றைய தினம் இடம்பெறும் பூரணை கும்பம் நிறுத்தும் நிகழ்வு பெரும் புகழ்பெற்ற நிகழ்வாக காணப்படுகின்றது .

கடல்நாச்சியம்மனுக்கு வைக்கப்படும் கும்பத்தினை அன்னையின் மடையில் வைப்பதற்காக பூசாரி அவர்களினால் அவை மந்திரம் ஜபிக்கப்பட்டு தூக்கப்படும்போது அந்தக் கும்பம் மேல் எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை இன்றும் காணலாம். இவ்வாறு வரலாற்றுப் புகழ் கொண்ட இந்த ஆலயத்தில் அதிசயங்கள் பல வருடாந்தம் நிகழ்ந்தவண்ணமே உள்ளன. கடல் கோள் அனர்த்தத்தின் பின்னர் அப்பகுதியில் இளைஞர்கள் முகாம் இட்டிருந்தனர். அப்போது அதிகாலை 2 மணியளவில் ஆலயத்துக்குள் உடுக்கை ஒலி மற்றும் சிலம்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

இவர்கள் என்னவென வெளியில் வந்து பார்த்தபோது ஆறு அழகான பெண்கள் கைகளில் சூலம், உடுக்கைகளுடன் தெய்வீக ராகம் இசைத்துப் பாடி ஆடுவதைக்கண்ட அந்த இளைஞர்கள் அருகில் சென்று பார்க்கவேண்டும் எனச் சென்றுள்ளனர். இவர்கள் அருகில்சென்றதுதான் தாமதம் குறித்த ஆறு பெண்களும் ஒளியாக அவ்விடத்தில் மறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் அதியத்தை ஏற்படுத்தியது. இதுபோன்று இரண்டு தடவைகள் தாம் இந்த அரிய காட்சியைக் கண்டதாக தெரிவித்தனர். இதில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் அடங்கியிருந்ததால் இந்த ஆலயத்தின் புகழ் மேலும் பரவியவாறு உள்ளது.

இவ்வாறு அற்புதங்கள் நிறைந்த ஆலயத்தில் புதிய ஆலயம் வடிவமைக்கும் வேலைகளும் வெகுவிமர்சையாக இடம்பெற்றுவருகின்றது. இதற்கு உதவவிருபும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு பல்திக்கும் அருள் பரப்பி அற்புதங்களுடன் நடமாடும் கடல்நாச்சியம்மனின் வருடாந்த ஒருநாள் சடங்கு இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பொங்கல் படைக்கும் நிகழ்வுடன் நிறைவுபெறும்.

No comments: