Tuesday, 13 May 2008

கல்முனையில் அதாவுல்லா மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல்; நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

வாகனங்கள் பலவும் நொருக்கப்பட்டன

அமைச்சர் அதாவுல்லா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது கல்முனையில் வைத்து நேற்று மாலை நடத்தப்பட்ட கல்வீச்சு மற்றும் தாக்குதல்களினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், பலவாகனங்கள் அடித்து நொருக்கப்பட்ட நிலையில் விஷேட அதிரடிப்படையினர் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் அமைச்சர் அதாவுல்லாவை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்டனர்.

நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் கல்முனையில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது;

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அரசு தரப்பு வேட்பாளர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் அக்கரைப்பற்றிலிருந்து பெரும் ஊர்வலமாக மருதமுனையை நோக்கிச் சென்றனர்.

இந்த ஊர்வலத்தில் சென்றவர்கள் தகாத வார்த்தைகளை கோஷங்களாக எழுப்பியவாறு ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் மருதமுனையை நோக்கி சென்று விட்டு பின்னர் மீண்டும் திரும்பி வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் சென்றவர்களின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் ஆத்திரமடைந்த நிலையில், பெருமளவானோர் கல்முனையில் இவர்களின் வருகையை எதிர்பார்த்து திரண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஊர்வலக்காரர்கள் கல்முனையை வந்தடைந்ததும் அவர்கள் மீது மிக மோசமாக கல்வீச்சுகள் மற்றும் தாக்குதல்கள் கண் மூடித்தனமாக நடத்தப்பட்டன.

அப்பகுதிமக்களின் தாக்குதல்களினால் நிலைகுலைந்த ஊர்வலக்காரர்கள் அவலக்குரலெழுப்பியவாறு நாலாபுறமும் சிதறி ஓடினர். பல வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட ஊர்வலக்காரர்கள் காயமடைந்தனர். வீதியெங்கும் இரத்தக்கறைகளும் கண்ணாடிச்சிதறல்களும் காணப்பட்டதுடன், மோட்டார் கைக்கிள்களும் வீதிகளில் ஆங்காங்கே கிடந்ததுடன், 3 மகேந்திரா ஜீப் வண்டிகள் சேதமடைந்த நிலையில், வீதியில் கைவிடப்பட்டிருந்தன.

இதற்கிடையில், பொதுமக்களின் தாக்குதலுக்குள் சிக்கிய அமைச்சர் அதாவுல்லாவையும் அவரது வாகனத்தையும் விஷேட அதிரடிப்படையினர் பெரும் சிரமத்தின் மத்தியில் மீட்டெடுத்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

இதன் பின்னர் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்ட பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு பிரயோகத்தை நடத்தி அவர்களை அவ்விடத்திலிருந்து விரட்டியடித்தனர்.

இதனால் அப்பகுதியெங்கும் பெரும் பதற்றநிலை காணப்பட்டது.

No comments: