ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத இலங்கை, தனது நாட்டின் மனித உரிமைகள் தொடர்பான கொள்கைகளை மீண்டும் மதிப்பிட்டுக்கொள்ள வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
“மனித உரிமை விடயத்தில்இலங்கை விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது” என நியூயோர்க்கைத் தளமாகக்கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய அமைப்பான மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் தன்னைத்தானே கடிந்துகொள்ளவேண்டியிருப்பதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான கொள்கைகள் மற்றும் அவைதொடர்பான செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் மீண்டும் மதிப்பிட்டு சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளது.
“பொதுச் சபையின் செய்தியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புரிந்திருப்பார் என நினைக்கின்றோம். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கொண்டுவர அவர் நடவடிக்கை எடுப்பார்” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்ததுடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கப்படக்கூடாதென கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசசார்பற்ற நிறுவனங்கள் கூட்டிணைந்து கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் நேற்று புதன்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற தேர்தலில் இலங்கை 13 வாக்கு வித்தியாசங்களால் தோல்வியடைந்தது. இலங்கைக்கு 101 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் அனுமதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருந்ததுடன், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகப் பதிலளித்திருந்தது.
எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை தவறியமை குறித்து கவலையடையப் போவதில்லையென இலங்கையின் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment