Thursday, 1 May 2008

சம்பூர்: எங்களுடைய பாரம்பரிய பூமி அது - அந்த பூமியை தந்தா….

இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த பிரதேச குடியிருப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு அந்த பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்; இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருக்கின்றார்கள். தாங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், தமது குடியிருப்புப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் இவர்கள், இதற்கு இந்தியா உதவுவது குறித்து அந்த நாட்டின் மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து பீ.பீ.சியிடம் கருத்து தெரிவித்த மூதூர் பிரதேச வாசி ஒருவர் ‘எங்களுடைய பாரம்பரிய பூமி அது, எங்களை ஓட்டங் காட்டிப் போட்டு இதனைச் செய்யிறது கடும் தவறான வேலை.

அதுக்கு இந்தியாவும் முன்னிற்க்குது. எங்களுக்கு அந்த பூமியை தந்தா எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். எங்கட ஒரே நோக்கம் எங்கட ஊருக்குப் போறது தான் எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த இடம் பெயர்ந்த மூதூர் பெண் ஒருவர்;, ‘நாங்கள் அதுக்கு தயார் இல்லை, அனல் மின் நிலையம் கட்டுறதுக்கு தயார் இல்லை. ஆனா ஒப்பந்தம் எண்டு சொல்லிறியல் நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கு இந்த ஒப்பந்தம் பற்றி தெரியுது’ என தெரிவித்தார்.

பீ.பீ.சீயிடம் தனது வேதனையை தெரிவித்த மற்றும் ஒரு இடம்பெயர்ந்த ஆண் ‘அதை வந்து இப்பிடி ஒரு அனல் மின்நிலையத்தை அங்க நிறுவி அங்குள்ள மக்களை எல்லாம் கிழ்தர நிலைக்கு கொண்டு வந்து அந்த மக்களை அடிமைப் படுத்த இலங்கை அரசாங்கம் கங்கணம் கட்டிக் கொண்டு நிக்கேக்க இந்த இந்தியா கூட இதற்கு துணை போகுமாக இருந்தால் அது தமிழர்களுக்கு இந்தியா செய்யிற மிகப் பெரிய துரோகம் எண்டுதான் சொல்லவேணும்’ என மட்டக்களப்பு அகதி முகாம்களில் வாழும் மக்கள் தங்களின் ஆதங்கத்தையும் உள்ளக் குமுறல்களையும் பீ.பீ.சீ செய்தியாளர் உதயகுமாரிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் விசேட நிபுணர்களின் குழுவின் தீர்மானத்தின் படியே இந்த இடத்தை தாம் தெரிவு செய்ததாகக் கூறும் இலங்கை மின்சக்தி எரி பொருட்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன, திருகோணமலைக் கடற்படைத்தளம் சம்பூரில் இருந்து தாக்கப்படும் அபாயம் இருந்ததனாலேயே அரசாங்கம் அதனை விடுவிக்க வேண்டி ஏற்பட்டது என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த பகுதி, தற்போது சுற்றுலாப் பயணத்துறைக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதால் அது பொருத்தமற்றது எகனவும் தெரிவித்தார்.


ஆனால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் இடம்பெயர்ந்தவர்களை தமது சொந்த இடங்களில் குடியமர்த்துவதாகவும்;, சம்பூர் அனல் மின்நிலையத்தை முன்பு தீர்மானித்த இடத்த்தில் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேசி முடிவெடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இது குறித்து மீண்டும் கருத்து வெளியிட்ட அமைச்சர் யோன் செனிவிரட்ண இது குறித்து யாரும் கவலையடையத் தேவையில்லை, இங்கிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்படும். அவர்களுக்கு உரிய அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். இவை பற்றி விரிவாகப் பேசி முடிவெடுக்கலாம் என தெரிவித்தார்.
ஆனால் அமைச்சர் யோன் செனிவிரட்ணலின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்த மூதூர் இடம்பெயர்ந்த நலன்புரிச் சங்கத்தின் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன் ‘அனல்மின்நிலைய அமைப்பு என்பது மூதூர் கிழக்கு பகுதி மக்களின் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் அமைய வேண்டும். அதன் நிலப் பங்கீடு என்பது வேறு பகுதிக்கு நகர்த்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. ஒரு மாற்றுத் திட்டத்தை அதாவது மாற்றுத் திட்டத்தை முன்வைத்து அனல் மின் நிலையத் திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பது தான் எமது கருத்து. அந்த அடிப்படையில் நாங்கள் இரண்டு தலைவர்களுக்கும் அதாவது இலங்கை ஜனாதிபதிக்கும், இந்தியாவின் பிரதம மந்திரிக்கும் எமது கோரிக்கையையும் எமது இந்த இக்கட்டான நிலைமையையும் எமது எதிர்பார்ப்பையும் குறிப்பிட்டு நாங்கள் கடிதம் அனுப்ப இருக்கிறோம். ஆந்த மகஜர்களுக்கு உரிய கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகள் இப்போது நடைபெற்று வருகிறது’ எனக் குறிப்பிட்டார்.
நன்றி பீ.பீ.சீ

No comments: