Thursday, 22 May 2008

உலகத் தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களை இலங்கை நிறுவ வேண்டும்-பில் கேட்ஸ்

உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை உளளூரில் நிறுவுவதன் மூலம், நவீன உலக அறிவிலும், தொழில்நுட்பத்திலும் இலங்கை கால்பதிக்க வேண்டும் என உலகளாவிய தகவல் தொழில்நுட்ப ஜாம்பவானும் மைக்ரோசொப்ட் நிறுவனத் தலைவருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நவீன தகவல் தொழில்நுட்ப நிலையம் ஒன்றினை நிறுவவுள்ளதாகவும், இதன் மூலம் இலங்கையின் தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிகச் செயன்முறை புறச்செய்விப்புச் சந்தைக்கு சிறந்த ஒத்துழைப்பினை வழங்கமுடியும் என எதிர்பார்ப்பதாகவும் மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய அரசாங்கம் மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த அரசாங்க தலைவர்கள் கூட்டமைப்பினருக்கான நிகழ்வில் கலந்து கொண்ட மைக்ரோசொப்ட் தலைவரை, அமைச்சர்களான கரு ஜயசூரிய, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிகச் செயன்முறை புறச்செய்விப்புத் தொழிற்சந்தையை வளர்ச்சியடையச் செய்வதற்கான விசேட திட்டம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படுவரும் நெனசல, விதாதா தொழில்நுட்ப வள நிலையங்களூடாக கிராமப் புறங்களுக்கும் தொழில்நுட்ப அறிவைப் பரவலாக்கும் பொருட்டு, அரசாங்க ஊழியர்கள் சுமார் 500 பேருக்கு விசேட தொழிற்திறன் பயிற்சிகளை மைக்ரோசொப்ட் நிறுவனம் வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: