Sunday, 4 May 2008

கிழக்கில் 170,000 வாக்காளர் அட்டைக்ள விநியோகிக்கப்படவில்லை; ஐ.தே.கட்சி குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான 170,000 வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படாமல் தபால் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான மொத்த வாக்காளர் அட்டைகளில் 20 வீதமான வாக்காளர் அட்டைகளே இவ்வாறு விநியோகிக்கப்படாதிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிள்ளையான் குழுவினரைக் கொண்டு தேர்தலில் கள்ள வாக்குகளை இடுவதற்கே இந்த வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படாமலிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல் ஆணையாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள தபால் மா அதிபர் கே.பி. திஸாநாயக்க மக்கள் தமது இருப்பிடங்களை மாற்றியுள்ளதன் காரணமாகவும், வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதன் காரணமாகவுமே, இந்த வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடியாதிருப்பதாகவும் இந்தப் பிரச்சினை வழமையாக எல்லாத் தேர்தல்களிலும் ஏற்படுகின்ற ஒன்றே எனவும் கூறியுள்ளார்.

விநியோகிக்கப்பட முடியாத இந்த அட்டைகள் கடுமையான பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல, பிள்ளையான் குழுவினர் வீடுவீடாகச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பறிமுதல் செய்துவருவதாகவும், ஒரு வீட்டில் 5 வாக்காளர் அட்டைகள் இருந்தால் அவற்றில் 3 அட்டைகளை அவர்கள் பறிமுதல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஊர்காவல் படையினரை களத்தில் இறக்கி, அவர்களை அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாகவும், ஆனால் அதற்கு ஊர்காவல் படைவீரர்கள் மறுத்துவிட்டதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அடையாள அட்டைகள் இல்லாதோர் கிராம சேவகர்களால் உறுதிப்படுத்தப்பட்ட விசேட அனுமதி அட்டையினைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் எனும் சலுகையைப் பயன்படுத்தி, அரசாங்கம் கள்ள வாக்குகளை அளிப்பதற்காக கிராம சேவகர்கள் மூலம் தற்காலிக அனுமதி அட்டைகளை வழங்குவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

No comments: