அரசியல் ரீதியான பின்னடைவுகளை வெற்றிகொள்ளும் ஓர் சிறந்த உத்தியாக நாடாளுமன்ற ஒத்திவைப்புக்களை அரச தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் கடந்த 6 ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான நாடாளுமன்ற ஒத்திவைப்பும் ஓர் இராஜதந்திர உபாயமாகவே அரசியல் வட்டாரத்தில் நோக்கப்படுகிறது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. |
இது தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.05.08) வெளிவந்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- எந்தவித முன்னறிவித்தல்களும் இன்றி கடந்த 6 ஆம் நாள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் என்று பலர் எதிர்வு கூறியிருந்தனர். எனினும், ஜே.வி.பி.யின் ஆதரவுடன் அரசாங்கம் வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ஒத்திவைப்பிற்கான காரணம் இந்தத் தடவை நாடாளுமன்ற ஒத்திவைப்பு மிக முக்கியமான ஒரு சந்தர்ப்பத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்குத் தேர்தல், பொருட்களின் அளவு கடந்த விலையேற்றம், போர் முன்நகர்வு போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளது. எவரும், எதிர்பார்க்காத தருணத்தில் தேவையற்ற விதத்தில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யும் குற்றம் சாட்டியிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடயம் அறியாது நாடாளுமன்றத்திற்கு சென்றதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரச தலைவரின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்குத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அரச தலைவர் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கத் தீர்மானித்தார். அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை ஓரளவு நியாயப்படுத்தக்கூடிய ஏதுக்கள் காணப்பட்டன. எனினும், அதிகரித்துச் செல்லும் விலைவாசி, கண்மூடித்தனமான இராணுவ முன்நகர்வுகள் மற்றும் வன்முறைகள் செறிந்த கிழக்குத் தேர்தல் நடவடிக்கைகள் எனப் பல காரணிகளின் பின்னணியிலேயே அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கக்கூடிய அதிஉயர் பீடமான நாடாளுமன்றத்தை தன்னிச்சையாக ஒத்திவைத்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்த வகையிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அரசாங்கமும் அதன் ஆதரவு கூட்டணிகளும் கிழக்கில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்காமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உடனடிக் காரணியாக கருதப்படுகிறது. மேலும், பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு பளு மற்றும் போர்த் தோல்விகள் என்பவற்றை மூடிமறைத்துக் கொள்வதற்காகவும் அரசாங்கம் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்துள்ளது. ஒத்திவைப்பால் ஏற்படும் பாதகம் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரச தலைவருக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க அதிகாரம் இருப்பதாகவும், அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவைத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பல முக்கிய காரணிகள் தொடர்பாக விவாதம் நடத்தப்படுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட ஜனநாயக விரோத தந்திரோபாயமாக இதனை நோக்க வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் வெறுமனே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை மாத்திரம் வழங்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற செயற்குழுக்கள், பிரேரணைகள், சட்டமூலங்கள் என்பவையும் இரத்துச் செய்யப்படும் என்பதே இவ்வாறு அவை அமர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதில் உள்ள பாதகம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக பாரிய நிர்வாகச் சிக்கல் நிலைமை உருப்பெறும், குறிப்பாக மீண்டுமொரு முறை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட நேரிடும், அனைத்துப் பணிகளையும் இரண்டு தடவைகள் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரச தலைவர் மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த போது சில சட்டமூலங்கள் மாத்திரமே நிலுவையில் இருந்தன. சட்டமூலங்கள் மற்றும் பிரேரணைகள் மீண்டுமொரு முறை ஆரம்பத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவொரு வேலைப்பளு மிக்கதோர் செயற்பாடாகும். இவ்வாறு சட்டமூலங்கள் மீள உருவாக்கப்படும் செயன்முறை நடைபெறும் வரை கிழக்குத் தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமான வகையில் நடைபெற்றது என நியாயப்படுத்த அரசாங்கத்திற்கும், அரச தலைவருக்கும் போதிய கால அவகாசம் கிடைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். விசாரணை ஆணைக்குழுக்கள் இரத்தாகலாம் அநேகமான சட்ட மூலங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 20 வரைவு சட்டமூலங்கள் முதலாம் வாசிப்பிற்காக நிலுவையில் உள்ளன. அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள், அரசாங்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல சட்டமூலங்கள் மற்றும் தெரிவுக்குழுக்கள் என்பன அவை ஒத்திவைக்கப்பட்டதுடன் இரத்துச் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மட்டுமன்றி விசாரணைக்குழு பொறுப்புக்களை தமக்கு தேவையான வகையில் மீளமைத்துக் கொள்ளமுடியும். குறிப்பாக கோப் தெரிவுக்குழுவின் தலைவராக செயலாற்றும் விஜயதாச ராஜபக்சவை இதன் மூலம் பதவி நீக்கம் செய்து தமக்கு தேவையான ஒருவரை நியமிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோப் ஆணைக்குழுவின் நுழைந்ததன் மூலம் பல்வேறு குழப்ப நிலைமைகள் ஏற்பட்டிருந்ததனை இதற்கு மேற்கோளாகக் காட்ட முடியும். கடந்த அரச தலைவர் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக தற்போதைய அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல்- வாங்கல் மற்றும் மிக் வானூர்திக் கொள்வனவு மோசடி என்பன பற்றி விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட குழுக்கள் நாடாளுமன்ற ஒத்திவைப்பின் மூலம் இரத்தாகக் கூடிய வாய்ப்பு ஏற்படும். கிழக்கு தேர்தல் போர் பின்னடைவுகள், பொருட்களின் விலையேற்றம் மற்றும் தெரிவுக்குழு இரத்துச் செய்தல் போன்ற மிக முக்கிய விடயங்கள் தவிர்ந்த ஏனைய சில விடயங்கள் தொடர்பாகவும் அரச தலைவர் தந்திரோபாயமாக காய் நகர்த்தவுள்ளார். எதிர்வரும் ஜூன் 5 ஆம் நாளுக்குப் பின்னர் கூட்டப்படும் நாடாளுமன்றத்தில் பல்வேறு பதவி மாற்றங்களை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற ஒத்திவைப்பு வரலாறு 1978 ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் 18 தடவைகள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலாவது நாடாளுமன்றம் 7 தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நாடாளுமன்றம் 4 தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது நாடாளுமன்றம் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆறாவது நாடாளுமன்றம் அதாவது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நாடாளுமன்றம் இதுவரையில் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சட்டத்தின் பார்வையில்... தேசிய அவசர நிலைமைகள் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மாத்திரமே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட முடியும் எனவும், ஜனநாயக எதிர்க்கட்சியின் குரல்களை அடக்குவதற்காக இவ்வாறு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது ஜனநாயக விரோதச் செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். சொக்சி தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தலில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் மற்றும் வன்முறைகள் தொடர்பான தகவல்களை மக்களிடமிருந்து மூடிமறைப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டமே இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Tuesday, 13 May 2008
பின்னடைவை வெற்றிகொள்ளும் ஓர் உத்தியே நாடாளுமன்ற ஒத்திவைப்பு: "சண்டே லீடர்"--puthinam.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment