Saturday 14 June 2008

வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கை 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுள்ளது

இந்த ஆண்டுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களின் பொருட்டு அரசாங்கம் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் திரட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வருடாந்த கடன் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் முன்னணி சர்வதேச வங்கிகளிடமிருந்து இலங்கை இந்தக் கடன் தொகையைத் திரட்டியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கே இந்த நிதி செலவிடப்படவுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக குவைஉh சுயவiபௌ எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இது குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறோம். இது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது" என அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் மெக்கோமார்க் தெரிவித்துள்ளார்.

"வெளிநாட்டுக் கடன்களின் அதிகரிப்பு மற்றும் வட்டி அதிகரிப்பினால் இலங்கையின் நாணயத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையின் படி, 2007ஆம் ஆண்டிற்கான கடன் நிலுவை 2.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விடயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே என மத்திய வங்கியின் தலைமைப் பொருளியலாளரான நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments: