Saturday, 14 June 2008

400 பொலிஸாரின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

18 வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட 400 பொலிஸார் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்கவிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு ஜுன் 11ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் 401 பொலிஸார் விடுதலைப் புலிகளால் படுகொலைசெய்யப்பட்டதாக பாதுகாப்புத் தொடர்பான ஊடக மையம் அறிவித்துள்ளது.

“அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 401 பொலிஸார் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்” என அந்த ஊடக மையம் தெரிவித்துள்ளது.

18 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தப் படுகொலைக்கு அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் என தற்போதைய அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.

அப்போதைய அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமைய பொலிஸாரை விடுதலைப் புலிகளிடம் சரணடையுமாறு 1990ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி பணித்ததாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும், தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக நிலையம் விடுத்திருக்கும் இந்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து எந்தவிதமான பதிலும் வெளியிடப்படவில்லையென சர்வதேச செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது.

No comments: