கொழும்பில் நடைபெறவிருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் ஆசிய நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இலங்கைப் படையினரே பாதுகாப்பு வழங்குவார்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி, பாலித கொஹண தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குப் பாதுகாப்பு வழங்க இந்தியப் படையினரும், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் ஹர்ஷாய்குப் பாதுகாப்பு வழங்க ஆப்கானிஸ்தான் படையினரும் இலங்கை வரவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த ஊடகத் தகவல்களை மறுத்திருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண, அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் இலங்கைப் படையினரே பாதுகாப்பு வழங்குவார்கள் எனக் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்கென, இந்தியாவின் கறுப்புப் பூனைகள் படையணி உட்பட 3000 இந்தியப் படையினர் இலங்கை வரவிருப்பதாகவும், இலங்கை கடற்பரப்பில் இந்தியக் கடற்படையினரின் கப்பல்கள் மற்றும் வான்பரப்பில் இந்திய உலங்குவானூர்திகள் என்பன பாதுகாப்பில் ஈடுபடும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் தனக்குத் தேவையான பாதுகாப்பு அதிகாரிகளை அங்கிருந்து அழைத்துவரத் தீர்மானித்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அடுத்தமாதம் 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவிருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டை முன்னிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நகரிலிருக்கும் பிச்சைக்காரர்களை தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கவைப்பது தொடர்பாக கொழும்பு மாநகரசபை ஆராய்ந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
No comments:
Post a Comment