Saturday, 14 June 2008

பாரம்பரிய வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்க முயற்சிக்கும் அரசுக்கு முதலமைச்சர் பாடம் புகட்டுவாரா?

* முன்வந்தால் மு.கா. ஆதரவளிக்கும் ஹக்கீம் கூறுகிறார்

கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்றுவிட முயற்சிக்கும் மத்திய அரசாங்கத்துக்கு முதலமைச்சர் தகுந்த பாடம் புகட்ட முன்வந்தால் முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்குமென கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் புதன்கிழமை தெரிவித்தார். முதலமைச்சரின் கொள்கை உரை மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார். அவர் சொன்னதாவது;

முதலமைச்சரின் கன்னி கொள்கை உரை குறித்து சில வார்த்தைகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன். அதற்கு முன்பதாக கடந்த தேர்தலில் நெருக்கடி, அச்சுறுத்தலுக்கு மத்தியில் எமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முதற் கண் நன்றி தெரிவிக்கின்றேன்.

முதலமைச்சர் பதவி தொடர்பாக முதலமைச்சரின் அணியிலே முரண்பாடான கருத்துக்கள் வளர்த்தெடுக்கப்பட்டது. இருப்பினும், முதலமைச்சர் நேர்மையாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் அவரை நான் வாழ்த்துகின்றேன்.

சபையின் அமர்விலே நான் மகிழ்ச்சியோடு கலந்துகொள்ளவில்லை. நாம் எதிரணியில் அமர்ந்திருக்கின்றோம் என்ற காரணத்தினால் அல்ல. எனது மகிழ்ச்சி இன்மைக்குக் காரணம் தமிழ்பேசும் சமூகத்தின் தலைமை தங்கள் மாகாணத்தில் அதிகாரங்களை அனுபவிப்பதற்கான போட்டியினால் எனக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையீனமேயாகும்.

காலம் காலமாக மறுக்கப்பட்டு வரும் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளுக்காகவும் அபிலாஷைகளுக்காகவும் முதலமைச்சர் துணிவுடன் போராடுவதாக இருந்தால், அவருக்கு நாம் பூரண ஆதரவை வழங்குவோம்.

முதலமைச்சரின் கொள்கை உரையின் இரண்டு அம்சங்கள் குறித்து நான் பேசவிருக்கின்றேன். புனர்வாழ்வும் மீள்குடியேற்றமும் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றியதாகும். கொள்கை உரையில் புனர்வாழ்வும் மீள்குடியேற்றமும் பற்றி 5 பந்திகளும் சட்டமும் ஒழுங்கும் குறித்து 2 பந்திகளும் உரையில் உள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணசபைக்கு நேர்ந்த கதிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த மாகாண சபையில் நாம் எதிர்க்கட்சியிலிருந்தோம். அந்தச் சபை கலைக்கப்படுவதற்கு காரணமாக தனிநாட்டுப் பிரகடனம் அமைந்தது. மாகாண சபைக்கு வளங்கள் குறைவு அதேநேரம் வழங்கப்படும் அதிகாரங்கள் பின் கதவினால் பறிக்கப்பட்டு வருகின்றன. அதே அநியாயம் தான் இன்னும் அரங்கேறி வருகின்றது.

புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் பற்றியது:திருகோணமலை மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயம், விசேட பொருளாதார வலயம் ஆகியன வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயம் பாதுகாப்பு அமைச்சின் கீழும் விசேட பொருளாதார வலயம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த 4,249 குடும்பங்களைச் சேர்ந்த 15,648 பேர் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறி மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். உயர் பாதுகாப்பு வலயத்தில் 19 பாடசாலைகள் இயங்கவில்லை. 18 இந்துக் கோவில்கள் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் ஆகியன இவ்வலயத்தில் அமைந்துள்ளன. சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்க முடியாது வெளியேற்றப்பட்டனர். கடந்த ஒரு வருடகாலமாக தகரக் கொட்டில்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் படும் அவஸ்தைகளை கிளிவெட்டி, பட்டித்திடல் கிராமங்களுக்குச் சென்றால் நேரடியாகப் பார்க்க முடியும். இம் மக்கள் படும் கஷ்டங்கள் கொழும்பு அரசுக்கு புரியாது. 11 கிராம சேவையாளர் பிரிவுகளிலிருந்து இம்மக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் மீளக்குடியமர்வதற்கு ஒரு பகுதியினர் அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சிலர் மூன்று கிராமசேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் மீளக்குடியமர்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இன்னும் சம்பூர் கிழக்கு, கடற்கரைச் சேனை, கூனித்தீவு ஆகிய கிராமங்களில் மீளக்குடியமர்வதற்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

திருமலை துறைமுகத்தைச் சுற்றி சூழவுள்ள பிரதேசம் விசேட பொருளாதார வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பு நிறைய ஏற்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த விசேட பொருளாதார வலயம் சம்பூரிலிருந்து நிலாவெளி மற்றும் கந்தளாய் வரை நீண்டு செல்கிறது. இதற்கான காணி சுவீகரிப்பு சட்டரீதியாக நடத்தப்பட்டதா? யாருக்குமே தெரியாது. காணிச் சுவீகரிப்புக்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. அவை கடைப்பிடிக்கப்பட்டதா? இதுபற்றி தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா?

மத்திய அரசு கொழும்பிலிருந்து எமது வளங்களை சூறையாட அனுமதிக்க முடியாது. தீர்மானங்களை எடுப்பதில் எமக்கும் பங்கு வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில் உரிமைகளை அபகரிக்கும் வேலைக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்களுக்காக பேச வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு.

இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பாரம்பரிய வதிவிடங்களில் மீளக்குடியமர்த்துவோம் என்று முதலமைச்சர் தனது கொள்கை உரையில் கூறியுள்ளார்.

பாரம்பரிய வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்றுவிட முயற்சிக்கும் மத்திய அரசுக்கு முதலமைச்சர் தகுந்த பாடம் புகட்ட முன்வர வேண்டும். அவருக்கு அப்போது நாம் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

தட்டிக்கேட்கும் முதலமைச்சர் தான் எமக்குத் தேவை.

தனது கொள்கை உரையில் தமது நிறைவேற்று நிர்வாகத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டிருக்கின்றார். சட்டமும் ஒழுங்கும் மாகாண சபையின் கீழ் வரவேண்டும் என்றும் முதலமைச்சர் கோருகின்றார். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படக்கூடாது என்று மத்திய அரசின் பங்காளிக்கட்சி ஒன்று வலியுறுத்தியுள்ளது.

சமூகத்தின் உரிமைகள் பறிபோகும்போது வாய்பேசா மடந்தைகளாக நாம் இருக்கக்கூடாது. அமைச்சரவையில் ஜனாதிபதி முன்னிலையில் நம் அமைச்சர்கள் வாய்பேசா மடந்தையராகவே இருக்கின்றனர்.

மட்டக்களப்பு கலவரத்தை அடுத்து முதன் முதலாக முதலமைச்சருடன் தொடர்பு கொண்டேன். தமிழ், முஸ்லிம் உறவு பாதிக்கப்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். முதலமைச்சரை நம்பினோம். இன்னும் முதலமைச்சரை நம்புகின்றோம். தமிழ், முஸ்லிம் உறவு தொப்புள் கொடி உறவாக தொடர வேண்டும் என்று நம்புகின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸ் மீது பழி சுமத்தாதீர்கள். மற்றவர்களின் துன்பங்களில் குளிர்காய எண்ணுபவர்கள் அல்லர் நாம். ஒரே பூமியில் ஒன்றாக வாழ வேண்டும் என்ற உறுதியுடன் நாம் பணிபுரிகின்றோம். அரசியல் ரீதியாக அணி பிரிந்து இருக்கலாம்.

கிழக்கை பிரித்துவிட்டால் இனப்பிரச்சினைக்கு தீர்வு வந்துவிட்டது என்று முஸ்லிம் மக்கள் எண்ணிவிடக்கூடாது. மாகாண சபையின் நோக்கம் என்ன என்பதை கண்டறிந்து நாம் செயல்பட வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு வித்தியாசமானது. அனைத்து சமூகங்களும் தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் அதிகாரப் பங்கீடு பெற்று வாழக்கூடிய தீர்வு ஒன்றையே முஸ்லிம் காங்கிரஸ் நாடுகிறது.

அந்தத் தீர்வு கிடைக்குமா? சர்வகட்சி மாநாடு ஆரம்பமானது. அடிக்கடி கூடியது. அதன் முன்னேற்றத்தில் நாளுக்கு நாள் நம்பிக்கையிழந்து வருகின்றேன். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கம் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்ற பின்னராவது சர்வகட்சி மாநாட்டின் செயல்பாட்டின் முன்னேற்றம் காணப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றோம்.

No comments: