Thursday 12 June 2008

இலங்கையின் வன்முறைகள் இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கையில் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது: மன்மோகன் சிங்

இலங்கையில் அதிகரித்திருக்கும் மோதல்கள் இந்தியாவில் உள்நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவித்திருப்பதுடன், நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையிலும் சிக்கலை உருவாக்கியிருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மோதல்கள் ஒவ்வொருமுறையும் உக்கிரமடையும்போது இனரீதியான பதற்றம் ஏற்பட்டு தமிழகத்துக்கு வரும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.

நாட்டின் தேசியத்தில் அக்கறைகாட்டுவதுடன் பிராந்திய நாடுகளின் இணைந்து செயற்படுவது அவசியம் என இந்திய வெளிவிவகார சேவைகளின் அதிகாரிகளைச் சந்தித்த இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருந்தார்.

“சமாதானமான சூழ்நிலையுடைய அயல் நாடுகளே எமக்குத் தேவை. அதனால்தான் நாம், எமது அயல்நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகியவற்றுடன் சிறந்த உறவுகளைப் பேணவேண்டியுள்ளது. எமது தேசிய குறிக்கோளை அடைவதற்கு அவர்களின் நலனிலும் முக்கிய கவனம்செலுத்தவேண்டியுள்ளது” என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

“எமது அயல் நாடுகளுடன் குறிப்பாக பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் ஸ்திரத்தன்மையில் நாங்கள் அக்கறை செலுத்தவேண்டும். ஏனெனில் அவர்கள் தமது பிரச்சினைகளைச் சரியானமுறையில் எதிர்கொள்ளாவிட்டால் அவை எமக்கு எதிரான பிரச்சினைகளாக மாறிவிடும்” என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையின் நிலைமை நிச்சயமாக இந்தியாவின் சமாதானத்திலும், பாதுகாப்பிலும் தாக்கம் செலுத்தும்- இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையில் தற்பொழுது காணப்படும் மோதல்கள் நிறைந்த சூழ்நிலையானது இந்தியாவின் சமாதானம் மற்றும் பாதுகாப்பில் நிச்சயமாக தாக்கத்தைச் செலுத்தும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக புதுடில்லி உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அயல்நாடுகளில் ஏற்படும் மோசமான சூழ்நிலைகள் இந்தியாவுக்குப் பாரிய சவாலாக அமைந்துள்ளன என்றார் அவர்.

“அத்துடன், பாகிஸ்தானில் ஆட்சியமைத்திருக்கும் புதிய மக்கள் அரசாங்கம் பாதுகாப்பு, சமய சுதந்திரம் மற்றும் எல்லைப் பிரச்சினை போன்ற விடயங்களுக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவம் பற்றியும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது” என புதுடில்லியில் கொமாண்டர்கள் மத்தியில் உரையாற்றி அமைச்சர் அன்டனி குறிப்பிட்டார்.

No comments: