Wednesday 11 June 2008

அரசியல் பந்தாட்ட களமாக மாகாண சபைகள்

இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக ஆட்சி அதிகாரத்திலுள்ளோரின் அரசியல் பந்தாட்டக் களமாக மாறிவிட்டிருப்பதற்கு சான்றாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து இன மோதல்களின் தாக்கத்தைத் தணிக்க இந்த மாகாண சபை முறைமை உதவுமென இச் சபைகள் உருவாக்கப்பட்ட கால கட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாயினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இச் சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதியதாக இல்லையென தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நிராகரித்திருந்தனர். இணைக்கப்பட்ட வட,கிழக்கு மாகாண சபை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தனித்தனி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு தற்போது கிழக்கு மாகாணத்திற்கு தனியான அரசியல் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இப்போது வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே, கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் திகதி குறித்தும் ஆராயப்படுகிறது. இந்த இரு மாகாண சபைகளும் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானதென மக்கள் விடுதலை முன்னணி ஆட்சேபித்து நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் தெரிவித்திருக்கிறது. ஆனால், சபைகள் கலைக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம் இந்த இரு மாகாண சபைகளினதும் முதலமைச்சர்களினதும் சிபார்சின் பேரிலேயே ஆளுநர்கள் நிர்வாகத்தைக் கலைத்ததாக அறிவித்திருக்கிறது.கலைக்கப்பட்ட மாகாண சபைகள் உட்பட நாட்டில் அரசியல் நிர்வாகத்தைக் கொண்டிருக்கும் 8 மாகாண சபைகளும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டின் கீழேயே இருந்து வந்துள்ளன. இந்நிலையில் உரிய காலத்திற்கு முன்னர் இந்த இரு சபைகளும் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவுள்ளமை அரசியல் செல்வாக்கை நாடி பிடித்துப் பார்க்கும் ஆளும் கட்சியின் தந்திரோபாயமாகவே எண்ணத் தோன்றுகின்றது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த மாகாண சபைகளுக்கு 13 ஆவது திருத்தத்தில் விதந்துரைக்கப்பட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இன்னமும் அதாவது மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாத நிலையில் இச் சபைகளை வெறும் அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தும் பொம்மை நிர்வாகங்கள் போன்றே கொழும்பு நடத்துகின்றது என்ற எண்ணப்பாடே பரவலாக காணப்படுகின்றது.

அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து மக்கள் தத்தமது சொந்த இடங்களிலிருந்தவாறே தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே மாகாண உள்ளூராட்சி நிர்வாக கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பிரதான நோக்கங்களை முற்றாக ஓரம் கட்டிவிட்டு அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பே அதிகார மையத்திடம் அதிகளவுக்குக் காணப்படுவதை இந்த மாகாண சபைகள் உரிய காலத்திற்கு முன் கலைக்கப்பட்ட விடயங்கள் எடுத்துக் காட்டுகின்றன. எரிபொருள், உணவுப் பொருள் விலை அதிகரிப்பால் வாழ்க்கைச் சுமையை தாங்க முடியாமல் திண்டாடும் மக்களின் தலைமீது மேலும் செலவுகளை ஏற்றுவதாகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தேர்தல்களை நடத்துவதாயின் அதற்குப் பலகோடி ரூபா நிதி தேவைப்படும். அதற்குரிய பணம் திறைசேரியில் இருப்பதாக தென்படவில்லை. இந்த இரு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக குறிப்பிட்ட தொகையை நடப்பாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவில்லையென்பது நிச்சயமாகும். அவ்வாறாயின் உத்தேச தேர்தல் செலவினத்தால் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இடைவெளி மேலும் அதிகரிப்பதுடன் பணவீக்கமும் மோசமாக உயர்வடையும். ஏற்கனவே, அமைச்சரவை எண்ணிக்கை உலகிலேயே பிரமாண்டமானதொன்று என்று கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்படுவதுடன் பாரிய தொகை இதற்கென செலவிடப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தத் தருணத்தில் மக்களை சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறும் ஆளும் தரப்பு செலவுகளைத் தவிர்த்து விடக்கூடியதாக இருக்கும் விடயங்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கின்றனர் என்பதே பெரும்பாலான மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும். தேர்தல் வந்துவிட்டால் அரசியல் கட்சிகள் செலவுக்காக வர்த்தகப் பிரமுகர்கள், செல்வந்தர்களை நாடுவது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இடம்பெறும் வழமையான நடைமுறைகளாகும். ஆனால், இந்தப் பணம் ஏதோ ஒரு விதத்தில் பொது மக்களிடமிருந்தே வசூலிக்கப்படுகின்றது என்பது அறியாத விடயமல்ல. ஒட்டு மொத்தமாக கூட்டிக் கழித்துப் பார்த்தால், அவசியமற்ற தேர்தல்களால் பாதிக்கப்படுவது பொது மக்களே.

Thinakural

No comments: