அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 5000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ஜூலை மாதம் பாரிய தொழிற்சங்க போராட்டடமான்றை முன்னெடுக்க தேசிய தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக ரிவிர வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 80ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இடம்பெற்ற பாரிய தொழிற்சங்கப் போராட்டம் நடைபெற்று 28 ஆண்டுகள் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில், இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அப்போது இடம்பெற்ற தொழிற்சங்கப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத அகில இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனம், ஊழியர் சேவை சங்கக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியனவும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக தேசியத் தொழிற்சங்கச் சம்மேளனத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கன் முன்னணி மற்றும் லங்கா சமசமாஜ கட்சியுடன் தொடர்படைய தொழிற்சங்கங்களுக்கும் இந்த ஜூலை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன் முதல் கட்டமாக லட்சக் கணக்கான தனியார்துறை ஊழியர்கள் பங்கேற்கும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஜூன் மாத இறுதியில் ஊழியர் சேவை சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் போராட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளதாகச் சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தப் போராட்டம் எதிர்வரும் ஜூலை மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
தொழிற்சங்கங்களினால் கோரப்படும் 5000 ரூபா சம்பள உயர்வை அரசாங்கம் வழங்காவிடின் ஜூலை மாத இறுதியில் அனைத்து அரச மற்றும் தனியார்துறை உழியர்களின் பங்களிப்பில் பாரிய ஜூலை தொழிற்சங்க போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், துறைமுக அதிகாரசபை போன்ற நிறுவனங்களும், நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனியார்துறை ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சங்கப் போராட்டங்கள் நடைபெறும் தினங்கள் குறித்த தகவல் எதிர்வரும் 16ம் திகதி அநேகமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிவித்தலைத் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் துரித கதியில் ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Sunday, 15 June 2008
ஜூலை மாதத்தில் நாடு தழுவிய ரீதியில் பாரிய தொழிற்சங்கப் போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment