Thursday 12 June 2008

திருகோணமலையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் உயர்பாதுகாப்புவலயம் சர்வதேச சட்டத்துக்கு முரணானது- மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்

திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்பாதுகாப்பு வலயமானது சர்வதேச சட்டத்துக்கு முரணான வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியமர்வதற்கு உரிமை உடையவர்கள். சர்வதேச சட்டத்துக்கு அமைய எந்தவொரு நபரும் ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு இல்லத்து விடயத்தில் தலையிடுவதற்கு உரிமை அற்றவர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் கடந்த மே மாதம் திருகோணமலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் மூத்த ஆய்வாளர் மிராக் ரஹீம் மற்றும் ஆய்வாளர் பவானி பொன்சேகா ஆகியோர் இணைந்து இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

பல்வேறு அரசாங்கங்களால் மாற்றப்பட்ட நிலக்கொள்கைகள் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளன. திருகோணமலையில் உருவாக்கப்பட்டிருக்கும் உயர்பாதுகாப்பு வலயத்தால் 7,338 பேர் தமது இருப்பிடங்களை இழந்துள்ளனர். உயர்பாதுகாப்பு வலயத்தால் பெருமளவானவர்கள் வீடுகளை இழந்திருப்பது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தவேண்டியுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கங்களின் கல்லோயா குடியேற்றத் திட்டம் போன்ற திட்டங்கள் வரலாற்றுரீதியில் இனப்பிரச்சினையுடன் தொடர்புபட்டு வருகின்றன. வாழ்க்கைத் தரத்தை அதிகரித்துச் செல்வதற்கு காணிகள் மற்றும் சொத்துக்களின் அவசியத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

“13வது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். எனினும், அந்த விடயம் தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய விடயமாகவே உள்ளது” என மாற்றுக் கொள்கைகளுக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: