Monday 30 June 2008

மோதல்களை நிறுத்தினால் அரசாங்கம் கவிழும்: விமல் வீரவன்ச

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அது தமக்குத்தாமே மரண அத்தாட்சிப் பத்திரத்தை எழுதுவதற்குச் சமமாக அமைந்துவிடும் என தேசிய சுதந்திர முன்னணி, எச்சரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களை இடைநிறுத்தினால் அது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு முடிவுகாலமாக அமைந்துவிடும் என பத்தரமுல்லவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

“அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு தொடர்பாக மக்கள் முறைப்பாடுகள் எதனையும் செய்யவில்லை. மோதல்களைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதிலேயே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்புத் தன்மை தங்கியுள்ளது. அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் போருக்கும், அரசாங்கத்தின் நீடிப்புக்கும் இடையில் தொடர்புள்ளது. மோதல்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதைத் தவிர அரசாங்கத்துக்கு மாற்றுவழி இல்லை” என்றார் விமல் வீரவன்ச.

அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்ற முற்பட்டால் அது அவர்களுக்கு மரணச் சான்றிதழ் எழுதுவதைப்போன்றதாக அமையும் எனக் குறிப்பிட்டிருக்கும் தேசிய சுதந்திர முன்னணி, மோதல்களை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்குப் பல்வேறு தரப்புக்களிடமிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளது. வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மோதல்களை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம், அயல் நாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் போன்றவற்றிடமிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக விமல் வீரவன்ச நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த சனிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த விமல் வீரவன்ச, “இந்தியாவின் கைப்பொம்மையாக பிள்ளையான் செயற்படுகின்றார் என நான் நினைக்கவில்லை. ஈ.பி.டி.பி.கட்சிக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இரண்டு கட்சிகளும் இந்தியாவினால் ஆதரவு வழங்கப்படும் கட்சிகளாயின் இவ்வாறு இடம்பெறாது” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் முதலாவது பொதுக்கூட்டத்தை ஜே.வி.பி.யினர் குழப்புவதற்கு முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

No comments: