ஐ.தே.க.யின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவை நீக்குவது தொடர்பாக கட்சியினுள் ஏற்பட்டுள்ள பூசல்கள் உச்சநிலையை அடைந்துள்ளதாக ராவய பத்திரிகை இன்று (June 15) தனது பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தது.
இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது கட்சியின் பிரதான செயலாளர் திஸ்ஸஅத்தநாயக்க மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகிய அங்கத்தவர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இருந்து வருகின்ற போதிலும், கட்சியின் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமைத்துவத்திலிருந்து நீங்க வேண்டும் என்ற போக்கிலேயே உள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் சில பிரதானிகள் June 13 ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கட்சி தலைமைத்துவத்திலிருந்து நீங்க வேண்டுமென கேட்டுக்கொள்ள இருந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க அந்த வேண்டுகோளுக்கு சரியான முடிவினை அறிவிக்காவிட்டால் எதிர்வரும் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களில் எதிர்ப்புக்குழு பங்கேற்பதில்லை எனவும் முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்திலிருந்து நீங்க வேண்டுமென உறுதியாக நிற்கும் குழுவில் கட்சியின் முன்னாள் தலைவரும், ரணிலுடன் நெருங்கியவருமான மலிக் சமரவிக்கிரம மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சண்டைலீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவும் இருப்பதாக தெரிய வருகிறது.
June 10 இந்திய சுற்றுலாவை முடித்துக்கொண்டு ரணில் நாடு திரும்பியதும் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சில சிரேஸ்ட தலைவர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியவர்களுள் ரேணுகா ஹேரத், அமரா பியசிறி ரத்நாயக்க, ஜோன் அமரதுங்க, திஸ்ஸ அதநாயக்க, எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரும் அடங்குவர்எனவும் கூறப்படுகிறது.
நாளை திங்கட்கிழமை ஐ.தே.க.யின் செயற்குழு கூடவிருப்பதாகவும் அச்சமயத்தில் ரணிலுக்கு எதிரான குழுவின் கடுமையான போக்குகள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்றும் இம்முன்னணியில் மங்கள சமரவீர சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரின் தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொள்வதென்பதும் இவ்வெதிர்ப்புக்குழுவின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவை கட்சித் தலைமைத்துவத்திலிருந்து நீக்குவதற்கு இதற்கு முன்பு 2 தடவைகள் முயற்சி மேற்கொள்ளப்பட்டன. அவ்விரு தடவைகளிலும் வந்த எதிர்ப்பினை ரணில் விக்கிரமசிங்க வெற்றிகரமாக முறியடித்தார்.
2000ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கட்சியின் உபதலைவர் கருஜயசூரிய மற்றும் பிரதித் தலைவர் காமினி அதுகொரல ஆகியோரின் தலைமையில் ரணிலுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சியினை தனது அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்ற ஒப்புதலுடன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதன் பின்பு 2005 ஜனவரித் தேர்தலின் பின்னர் ரணிலின் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை மீண்டும் தலைதூக்கியது. அச்சந்தர்ப்பத்தில் கட்சியின் உபதலைவர் கருஜயசூரிய உட்பட 17 பேர் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியினை உருவாக்கியதுடன், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment