Thursday, 12 June 2008

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல்


அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற வகையில் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வகையில் கறுப்புப் பட்டி போராட்டமொன்றை 80 தொழிற்சங்கங்கள் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்துறை மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.

உழைக்கும் வர்க்கத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால் எதிர்வரும் வாரம் முதல் பாரிய தொழிற்சங்க போராட்டங்கள் வெடிக்கும் என அவர் நேற்றைய தினம் (ஜூன்11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் எவ்விதத் திட்டமுமின்றி அப்பாவி பொதுமக்கள் மீது வாழ்க்கைச் செலவை பலவந்தமாக திணித்துள்ளதாகவும், நீண்டகாலமாக மக்கள் பொறுமையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பொதுமக்கள் தற்போது பொறுமையின் எல்லைக்கு வந்து விட்டதாகவும், அரசாங்கத்தின் இந்த பயணத்தை திசை திருப்ப வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வரும் சந்தர்ப்பத்தில், அரசாங்க அமைச்சர்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்வதாகவும், இறுதியாக அரசாங்கம் சம்பள உயர்வை மேற்கொண்டதனைத் தொடர்ந்து போக்குவரத்து செலவு மாத்திரம் 8000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும்பான்மையான அரசாங்க ஊழியர்கள் ரயிலில் பிரயாணிப்பதாகவும், ரயில் கட்டணங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகவும் சம்மேளனத்தின் தலைவர் நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் அரசாங்கம் பொருட்களின் விலையை 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: