சிறிலங்காவின் அக்குரஸ்ஸ பகுதியில் 10 வயதுச் சிறுமி ஒருவர் தான் வன்னியில் இருந்து குண்டு வைக்க வந்துள்ளதாக தெரிவித்த தகவலால் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சில பாடசாலைகளும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டன.
அக்குரஸ்ஸ - கொட்டப்பிட்டி மகா வித்தியாலயத்தின் அருகில் இச்சிறுமி நடமாடியதைக் கண்ட சிலர் கொடுத்த தகவலால் காவல்துறையினர் சிறுமியைப் பிடித்து விசாரணை செய்தனர்.
காவல்துறையினரின் கேள்விகளுக்குப் பதிலளித்த சிறுமி தன்னை விடுதலைப் புலிகள்தான் பெற்றோருடன் இங்கு அனுப்பி வைத்ததாகவும் குண்டு வைக்கவே வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் காவல்துறையினர், பதற்றப்பட்டதுடன் இத்தகவலை அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் தெரிவித்தனர்.
இதனால் வெலிகம, பிட்டபத்தர, ஹம்புறுப்பிட்டிய, ஹக்மன கொட்டப்பிட்டி போன்ற இடங்களிலும் குண்டுப்புரளி ஏற்பட்டது.
சிறுமியை காவல்துறையினர், மாத்தறை மூத்த காவல்துறை அத்தியட்சகர் பி.வி.பி.ஆயுதபாலாவிடம் ஒப்படைத்திருந்தனர்.
காவல்துறை அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையில் அச்சிறுமி அக்குரஸ்ஸ பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினரின் விசாரணையின் போது மிரட்டலுக்குப் பயந்து தன்னை விடுதலைப் புலி என்று கூறிவிட்டார் எனவும் தெரியவந்தது.
இச்சிறுமி பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிறுமிகளுடன் விளையாடியவாறு வழி தவறி இந்தப் பாடசாலைக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
நன்றி: தினக்குரல்
No comments:
Post a Comment