Wednesday 11 June 2008

பயங்கரவாத அழிப்பு நடவடிக்கைகளுக்கு பாப்பரசர் உட்பட சகலரும் ஆசீர்வாதம்???

பயங்கரவாதத்தை அழிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாப்பரசர் இரண்டாவது ஆசீர்வாதப்பர் உள்ளிட்ட பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் கைகோர்த்துக்கொண்டு ஆதரவளிக்கின்றனர் என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டு பிரஜைகளின் சுதந்திரம்,இறைமை, ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்ற நிலையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தோல்வியடைந்து வருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவித்துள்ளமையினை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என்றும் அவர் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகள் முக்கியத்துவமிக்க இடத்தை நோக்கிசென்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் நாட்டு பிரஜைகளின் சுதந்திரம் ,இறைமை,ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு சகலரும் கைகோர்த்து ஆசீர்வாதமளிக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்தர ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் கடந்த இரண்டுவருடங்களில் பயங்கரவாத செயற்பாடுகள் இருந்த நிலப்பரப்பிற்கும் பயங்கரவாத செயற்பாடுகள் இன்று ஒடுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பையும் யாரும் மறந்துவிடக்கூடாது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசியல் தலைமைத்துவம் எடுத்துள்ள நடவடிக்கைகளை போல இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தெற்கில் பொதுமக்கள் இலக்குவைக்கப்படுவதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கம் தோல்வியை கண்டுவருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளமையை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. தெற்கில் குண்டு வெடிப்பதனால் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான பயணம் தோல்வியடையவில்லை என்பதை அரசாங்கம் மட்டுமல்ல இலங்கை பிரஜைகள் உணர்ந்துள்ளனர்.

ஒரு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்தின் மாற்றுத்தலைவர் என்ற விளக்கமிருக்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு எதிராகவே கையை நீட்டுகின்றார்.

இலங்கைக்கான ஜேர்மனி நாட்டு தூதுவர் பாப்பரசர் பதினாறாவது ஆசீர்வாதப்பரை சந்தித்தபோது சர்வதேசத்திற்கே புற்றுநோயான பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அரசாங்கத்தினால் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக ஆசீர்வாதம் வழங்கியுள்ளது டன் பயங்கரவாதம் தோற்கடிக்கப்படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருக்கின்றார். எனினும் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராகவே ரணில்விக்கிரமசிங்க கையை நீட்டுகின்றார்.

இதேவேளை பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர் டேவிட்கெம்ரூனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடிய போது, பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளுக்கு அவரும் தனது ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இறையை ஒருமைப்பாட்டிற்கு பங்கத்தை ஏற்படுத்துமளவிற்கு பிரசாரநடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றார்.பயங்கரவாத செயற்பாடுகளை ஒழிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு நாட்டின் ஒவ்வொரு பிரஜைகளும் நேரடியாகவோ,மறைமுகமாகவே தங்களது ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றனர்.


ரணிலின் நடவடிக்கையை அரசாங்கத்தின் அமைச்சராக இருந்துகொண்டு கண்டிப்பதை விடவும் ஒருபிரஜை என்றவகையில் கண்டிக்கின்றேன்.

No comments: