Saturday, 14 June 2008

'எல்லாளன் படையுடன் தொடர்பில்லை'

அண்மைய கொழும்பு தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ள எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் கூறுகிறார்.

சமீப காலமாக கொழும்பில் நடக்கும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக எல்லாளன் படை என்கிற அமைப்பு, ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் மூலம் உரிமை கோரியிருந்தது.

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் நடப்பதற்கு பதில் நடவடிக்கையாக தாங்கள் இந்த தாக்குதல்களை நடத்துவதாக இந்த அமைப்பு கூறியிருந்தது.

இந்த எல்லாளன் படைக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.

இலங்கையின் வடமேற்கே, மன்னார் தீவில் எருக்கலம்பிட்டியில் அமைந்துள்ள கடற்படை நிலையை ஜூன் 11ஆம் தேதி அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அழித்ததாகவும் அவர் கூறினார். இதில் சுமார் 10 படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

அதேவேளை, விடுதலைப்புலிகளின் தாக்குதலை தாங்கள் முறியடித்ததாகவும், பாரிய இழப்புகளுடன் விடுதலைப்புலிகள் பின்வாங்கச் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை கடற்படை அறிவித்திருந்தது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐந்து விடுதலைப்புலிகளும், மூன்று கடற்படையினரும் கொல்லப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

No comments: