இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களுக்கு பொதுமக்களின் பணமே செலவுசெய்யப்படுவதால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளவேண்டியதேவை நாட்டு மக்களுக்கு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
எனினும், பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத் தளபாடக் கொள்வனவு தொடர்பான தகவல்களை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வெளியிடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறினார்.
இலங்கையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். சர்வதேச ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு கூடுதலான அச்சுறுத்தல்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த பல தசாப்தமாக பல்வேறு அரசாங்கங்கள் ஆட்சி நடத்தியுள்ளபோதும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே ஊடகவியலாளர்களுக்கு எதிராக கூடுதலான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இதுவரை காலமும் வடக்கு, கிழக்கிலேயே பெரும்பாலான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன், தாக்கப்பட்டுவந்தனர். எனினும், இந்தநிலை தற்பொழுதுமாறி தென்பகுதியிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும், அச்சுறுத்தப்படும் சூழ்நிலை தோன்றுவிக்கப்பட்டுள்ளது. 27 ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான செய்திகளை வெளியிட்டால் ஊடகவியலாளர்கள் சட்டரீதியாகக் கொல்லப்படும் நிலை தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறினார்.
இலங்கை அரசாங்கம் 17ஆயிரம் கோடி ரூபாவை யுத்தத்துக்குச் செலவிடுகிறது. இது மக்களின் பணம். எனவே, அரசாங்கம் பணத்தை என்னசெய்கிறது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை அனைத்துப் பிரஜைகளுக்கும் உள்ளது. அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்த போர் கப்பல்கள் பழையவை. அதேபோல இராணுவத்தினருக்கெனக் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் தலைக்கவசங்கள் பலம்மிக்கவையாக இல்லை. இவ்வாறான, ஊழல் சம்பவங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டது.
ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக எமது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதன் பின்னர் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க, ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்திருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளார். பிரதமரின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுகின்றனவா என ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர மேலும் கூறினார்.
No comments:
Post a Comment