Thursday, 12 June 2008

சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வேறெவருக்கும் ஹோட்டல்களைப் பதிவு செய்ய வேண்டாம்-வெளிவிவகார அமைச்சு

சார்க் மாநாடு நடைபெறவுள்ள ஜூலை 27 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் திருமண வைபவங்களுக்கோ ஏனைய நிகழ்வுகளுக்கோ அறைகளைப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு பிரபல ஹோட்டல்களுக்கு வெளிவிவகார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

நாட்டின் சூழ்நிலையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் ஹோட்டல்கள், இந்த சுற்றறிக்கையின் மூலம் மேலும் பாதிப்புக்களை எதிர்நோக்கும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறவுள்ள 15 வது சார்க் மாநாட்டின் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

"சார்க் மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் சில பகுதிகளை மூடிவிடும். இருப்பினும் எமது நட்டங்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படாது. அவ்வாறு வெளிநாட்டுப் பிரமுகர்களுக்காக ஹோட்டல்களைப் பதிவு செய்தாலும் ஹோட்டலின் மூன்றில் ஒரு பகுதியை மாத்திரமே அவர்கள் பதிவுசெய்வார்கள்" என கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தமது ஹோட்டல் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருப்பதன் காரணமாக ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் சுற்றறிக்கையின் காரணமாக குறித்த காலப்பகுதியில் முதன்மை ஹோட்டல்களுக்கு 10-15 மில்லியன் ரூபாய்களுக்கு நட்டம் ஏற்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments: