Thursday 12 June 2008

தமிழக மாணவர்கள் 52,000 பேருக்கு ஐடி வேலை

Tamilnadu map
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படித்த 72,000 மாணவ, மாணவியரில் 52,000 பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அண்ணாபல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பளிக்கும் வகையில், மாநில அளவில் கேம்பஸ் இண்டர்வியூவை தனியார் நிறுவனங்கள் மூலம் நடத்தி வருகிறது.

சாப்ட்வேர் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் இண்டர்வியூ நடத்தி மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறார்கள். சமீபத்தில் 300 மாணவர்கள் சி.டி.எஸ், டி.சி.எஸ்., கோத்ரேஜ், ராபர்ட் பாஸ் ஆகிய 4 நிறுவனங்களில் வேலை பார்க்க தேர்வானார்கள்.

அவர்களுக்கு வேலைக்கான உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது.

வேலைக்கான உத்தரவுகளை துணைவேந்தர் டி.விஸ்வநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த வருடம் படித்த 72,000 மாணவர்களில் 52,000 பேருக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது. மீதமுள்ள 20,000 பேருக்கும் வேலை கிடைக்கும் வகையில் மேலும் இண்டர்வியூ நடத்தப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 கல்லூரிகளிலும் 3,200 மாணவர்களில் 3,100 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

ஆங்கிலத்தில் தகராறு:

மாணவர்கள் பாடத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாலும் திறமையுடன் ஆங்கிலத்தில் விளக்கும் தகுதி பலருக்கு இல்லை. வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறனை மாணவர்களிடம் வளர்க்க அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டுவருகிறது. அதற்காக தொழிற்சாலைகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

4 அல்லது 5 கல்லூரிகளை இணைத்து இந்த திறனை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. பெரும்பாலும் தகவல் தொழில் நுட்ப துறையில் தான் அதிக வேலைவாய்ப்பு உள்ளது என்றாலும் இப்போது மெக்கானிக் மற்றும் சிவில் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. அதைச் சார்ந்த கம்பெனிகள் பல சென்னையை சுற்றி வந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பி.இ. கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் இடம் கிடைக்கும் என்றார்.

டிசிஎஸ் சாதனை:

இதற்கிடையே, வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த 1,075 மாணவ, மாணவியரை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு தேர்வு செய்துள்ளது டாடா கன்சல்டன்ஸி நிறுவனம்.

வேலூரில் உள்ள வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை கேம்பஸ் இன்டர்வியூவை டிசிஎஸ் நடத்தியது. இதில் 1,075 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments: