முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டின் சமகால அரசியல் போக்கில் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவரால் தனித்து நின்று போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலையிருப்பதாகச் சுட்டிக்காட்டும் அரசியல் தரப்புகள், அதன்காரணமாக அவர் சந்திரிகாவுடனும், மங்கள சமரவீரவுடனும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றன.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரசாரங்களில் ஈடுபடுவார் எனவும், அவரது வருகை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பலமாக அமையும் என நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் அரசியலில் ஈடுபடச்செய்து, அவரூடாக சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தினைக் கொண்டுவர அழைப்பு விடுக்கலாம் என ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்ப்பதாகவும் அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊழல்கள் போன்றவற்றினால் அரசாங்கத்தின் மீது ஏற்பட்டிருக்கும் பொதுவான அதிருப்தியினைப் பயன்படுத்தி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான வழிகளில் ஒன்றாகவே இந்தக் கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தக் கூட்டணி அமைக்கப்படுமானால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பு ருக்மன் சேனநாயக்கவிடம் ஒப்படைக்கப்படும் எனவும், ரணில் விக்ரமசிங்க கூட்டணியைத் தலைமை தாங்கி நடாத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, அண்மைக்காலமாக மக்கள் விடுதலை முன்னணிக்கும் அரசாங்கத்துக்கமிடையிலான முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றமை ஜே.வி.பியும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியங்களை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment