Monday 30 June 2008

ஐந்து முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியிருக்கும் இந்திய உயர்மட்டக் குழுவினர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உயர்மட்ட இந்தியக் குழுவினர், இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் ஐந்து முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியிருப்பதாகத் தெரியவருகிறது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ் சங்கர் மேனன், இந்திய பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகியோர், இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை முன்வைப்பது, ஆயுதக் கொள்வனவுகள் , பாதுகாப்பு நிலைவரம், பொருளாதார நிலைவரம், சார்க் உச்சிமாநாட்டை நடத்தும் இடம் போன்ற ஐந்து முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடு மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதாக இந்திய உயர்மட்டக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு நேரத்தை வீணாக்கும் செயற்பாடு என்ற அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வாவின் கருத்து மற்றும் இலங்கை விடயத்தில் இந்தியா தலையிடக்கூடாது என்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவின் கருத்து தொடர்பாகவும் இந்திய உயர்மட்டக் குழுவினர் தமது கவலைகளை வெளியிட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்த வருடம் ஜனவரி மாதம் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைத்த பிரேரணையை வரவேற்றிருக்கும் இந்தியா, அதனை அடிப்படையாகக் கொண்டு நல்ல தீர்வை முன்வைக்கக்கூடிய பிரேரணைகளை விரைவில் முன்வைக்க வேண்டும் எனவும், தென்னிலங்கை அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. 17வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தாமை குறித்தும் இந்தியா, இலங்கை உயர்மட்டக் குழுவினரிடம் கேள்வியெழுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு மறைமுகமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கியிருக்கும் இந்தியக் குழுவினர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் களையப்பட்ட பின்னரே அவர்கள் சர்வகட்சிக் குழுவில் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தை அச்சுறுத்தும் வகையில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி கருத்து வெளியிட்டமை குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்தி மற்றும் உணவு விடயங்களில் இந்தியக் கம்பனிகள் பலிக்கடாவாக்கப்படக்கூடாது என்பது உறுதிப்படுத்தப்படவேண்டுமெனவும் இந்தியக் குழுவினர், இலங்கைத் தரப்பினரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அவ்வாறான நடவடிக்கைகள் இரு தரப்பு உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்திவிடுமென அவர்கள் அச்சம் வெளியிட்டதாகவும் தெரியவருகிறது.

சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை மேற்கொள்ளும் ஆயுதக் கொள்வனவுகள் குறித்துக் கேட்டறிந்துகொண்ட இந்தியா, ஈரானுடனான ஆயுதக் கொள்வனவு தொடர்பாகவும் வினவியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியாவுடன் நெருங்கிய பாதுகாப்பு கூட்டுறவு ஒத்துழைப்பைப் பேணவேண்டுமெனவும் உயர்மட்டக் குழுவினர் வலியுறுத்தியிருப்பதாக அந்த ஊடகம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும், இந்திய பாதுகாப்பு ஆலேசாகர் எம்.கே.நாராயணன் தலைமையிலான குழுவினர், இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடம் கேட்டறிந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் ஏனைய பகுதிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இந்திய உயர்மட்டக் குழுவினர், இலங்கை பாதுகாப்புத் தரப்பினரிடம் வினவியுள்ளனர். பெருமளவான இலங்கை அகதிகள் தமிழகத்துக்கு இடம்பெயர்வது பற்றியும் இந்திய உயர்மட்டக் குழுவினர் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளால் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலங்கையில் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இலங்கை வந்த இந்திய உயர்மட்டக் குழுவினர் அக்கறை காட்டியதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சரத் பொன்சேகா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாகொட, ஆகியோரிடம் இந்தியா கேட்டறிந்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சார்க் உச்சிமாநாட்டைக் கொழும்பில் எங்கு நடத்துவது என்பது பற்றியும் இந்திய உயர்மட்டக் குழுவினர், இலங்கை உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்திய உயர்மட்டக் குழுவினர் 20 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அதற்கு முன்தினம் 19ஆம் திகதியே, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார். அவர்களின் இலங்கை விஜயம் பற்றி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகமவுக்குக் கூட விளக்கமளிக்கப்படவில்லையென கொழும்பு ஊடகமொன்று மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments: