Friday 13 June 2008

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்பிக்கப்படுகிறது

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான உலகளாவிய ரீதியிலான காலாந்த அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை முன்வைக்கப்படவுள்ளது.

இலங்கையின் இந்த அறிக்கையை மனித உரிமைகள் அமைச்சின் சார்பில் அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்தின் தலைவர் ரஜீவ விஜயசிங்க சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கை தொடர்பான காலாந்த அறிக்கை கடந்த மே மாதம் 13ஆம் திகதி மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் செயற்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகள் விமர்சனங்களை முன்வைத்திருந்தன. 80 நாடுகள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தன என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கையின் அறிக்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் 45 பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 11 பரிந்துரைகள் தொடர்பாக மேலும் ஆராயத் தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன், 26 பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக 19ஆம் திகதி நடைபெற்ற செயற்குழக் கூட்டத்தில் 26 விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.

இதேவேளை, தற்பொழுது நாட்டில் காணப்படும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அனர்த்தமுகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் என்ற ரீதியில் இலங்கையில் இருக்கவேண்டி இருப்பதாகவும், இதனால் இன்று ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இரண்டு தினங்களுக்கு முன்னர் கொழும்பு தனியார் ஊடகமொன்றிடம் கூறியிருந்தார்.

எனினும், தனக்குப் பதிலாக சமாதானச் செயலகத்தின் தலைவர் ரஜீவ விஜயசிங்க இலங்கை பற்றிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீண்டும் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ளத் தவறியிருக்கும் சூழ்நிலையில் இந்த அறிக்கை முன்வைக்கப்படுகிறது.

No comments: