Thursday 12 June 2008

யாழ்ப்பாணத்தில் இராணுவ நகர்வுகள் அதிகரிப்பு – சீ டி எம் ஏ துண்டிப்பு – ஊரடங்கு நீடிப்பு

இலங்கை இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் தமது முன்னரங்க நிலைகளை நோக்கி அதிகளவான படையினரையும் கவச வாகனங்களையும் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண கரையோர பிரதேசங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ஊரடங்கு சட்டமும் நீடிக்கப்பட்டுள்ளது. பாதைகளில் மக்கள் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. யாழ்ப்பாண நகருக்கு மாத்திரம் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலதிக துருப்பினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக யாழ்ப்பாண மக்கள் மத்தியில், பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னார்வு நிறுவனங்களின் வாகனங்களும் பாதைகளில் செல்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ வாகனங்கள் பாதைகளில் செல்லும்போது ஏனைய வாகனங்கள் செல்லுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள கையடக்க தொலைபேசிகள் அனைத்தும் கடந்த சனிக்கிழமை முதல் செயழிழக்கச்செய்யப்பட்டுள்ளன.

சீ டி எம் ஏ எனப்படும் கம்பியில்லா தொலைபேசியின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

யாழ். குடாநாட்டின் தென்கரையோரப் பகுதி ஊடாக எதிர்வரும் 19, 20 ஆம் நாட்களில் தாக்குதல் நடத்திக்கொண்டு குடாநாட்டுக்குள் நுழையப் போகின்றோம் என்று யாழ். குடாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடம் புலிகள் எச்சரிக்கை விடுத்தனர் என்ற ஒரு செய்தி குடாநாட்டில் பரவியுள்ளதையடுத்தே யாழ். மாவட்டத்தில் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுககளை படையினர் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: