இலங்கைக்கு வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்திக்க மறுப்புத் தெரிவித்ததால், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் கிழக்கு மாகாண விஜயத்துக்கு, அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான சுவீடன், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமை விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
கிழக்கு மாகாணத்துக்குச் செல்ல அனுமதிக்கவேண்டுமென இலங்கைக்கு வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் வெளிவிவகார அமைச்சிடம் முதலில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு சாதகமான சமிக்ஞையை வழங்கிய வெளிவிவகார அமைச்சு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்ட மாகாணசபை அதிகாரிகள் அவர்களைச் சந்திக்க விரும்புவதாகக் கூறியது.
எனினும், தமது விஜயத்தின்போது கிழக்கு மாகாணசபை முதலமைச்சரைச் சந்திக்க விரும்பவில்லையென ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குப் பதிலளித்துள்ளனர்.
இதனைக் கவனத்தில்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை கிழக்கு மாகாணத்திற்கு அனுமதிப்பதில்லையெனத் தீர்மானத்தது. கிழக்கு மாகாண முதலமைச்சரையும் மீறி கிழக்கு மாகாணத்தில் செய்வதற்கு ஒன்றுமில்லையென்ற நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள், அரசாங்கத் தரப்பினர், மற்றும் உள்ளூர் அரசியல் தலைவர்களைச் சந்தித்து, நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான காலாந்த அறிக்கை மற்றும் இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளனர்.
No comments:
Post a Comment