Saturday 14 June 2008

சிங்கள இனவெறியரசின் தொடரும் அட்டூழியங்கள்.


கண்டி, கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் சிங்கள இனவெறியரசின் மாணவர்கள் மீதான அட்டூழியங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

பெராதெனிய, மொறட்டுவ பல்கலைக் கழகத்திற் கல்வி கற்கும் மாணவர்கள் தொடர்ந்தும் இராணுவ மற்றும் காவற்துறையினரின் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள்.

பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு செல்லும் இரணுவத்தினரும், காவற்துறையினரும் சந்தேகத்தின் பேரிலான கைது, விசாரணைக்காக அழைத்துச் செல்லுதல் என்று கூறி தமிழ் மாணவர்களை தொடர்ந்தும் கைது செய்து வருவதோடு அவர்கள் மீதான தாக்குதல்களையும் நடாத்தி வருகின்றனர்.

பல்கலைக் கழக மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளுக்கு இரவு வேளையில் செல்லும் இராணுவ உடை தரித்தவர்களும், அவர்களுடன் செல்லும் சில சிங்கள காடைக்கும்பலும் மாணவர்களைத் தாக்கிவிட்டு, அவர்களின் வீடுகளில் இருக்கும் பணம் விலையுயர்ந்த பொருட்கள், கைத்தொலைபேசிகள், மடிக்கணணிகள் போன்றனவற்றைத் திருடுவதுடன், அவர்களைக் கைதுசெய்து வாகனங்களில் தூக்கி எறியப்பட்டு கடத்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.


மனிதநேயமற்ற காட்டுவாசிகள் போன்று தமிழ் மாணவர்களுடன் நடந்துகொள்ளும் காவற்துறையினரும், இராணுவத்தினரும், இராணுவப் புலனாய்வாளர்களும் மாணவர்கள் தமது அனைத்து ஆவணங்களினைக் காண்பித்தாலும் கூட விடுதலைப்புலி என்று முத்திரை குத்தி, யாழ்ப்பாணத்திலிருக்க வேண்டிய நீ; கொழும்பு எங்களுடைய இடம் இங்கு எதற்காக வந்தாய் என்று கூறி கண்மூடித்தனமாக தாக்குதல்களைத் தொடர்ந்தவண்ணமுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமல்ல கண்டி, கொழும்பு, மற்றும் புறநகர்ப் பகுதியைச் சூழ்ந்துவாழும் அப்பாவித் தமிழர்கள், இவ்வாறான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள்.

இதே வேளை வீடுகளுக்கு வருகைதரும் இராணுவத்தினருடன் பல்கலைக்கழகத்திற் கல்விகற்றுக்கொண்டிருக்கும் சக சிங்கள மாணவர்களும் வருவதாகவும், அவர்களும் இராணுவத்தினருடன் சேர்ந்து தாக்குதல் நடாத்திவருவதாகவும் கொழும்பு வாழ் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு வாழ் அப்பாவித் தமிழர்கள் காவற்துறையினரிடம் சென்று முறையிட முடியாமலும், தாக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலைகளில் சென்று சிகிச்சை பெறமுடியாமலும் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதுடன், பயத்துடனே தனது காலத்தினைக் கழிக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கைது செய்யப்படும் மாணவர்கள் தொடர்பாகவும், அவர்கள் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பாகவும் இராணுவத்தினரும், காவற்துறையினரும் கூறுவதற்கு மறுத்து வருகின்றனர்.

அப்பிரதேச காவற்துறை நிலையத்திற் கைது செய்தவர்கள் தொடர்பாகக் கேட்கப்படும்போது தாம் யாரையும் கைது செய்யவில்லை என அங்கு கடமையிலிருக்கும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா அரச தலைவர் மகிந்தராஜபக்சவின் விசேட உத்தரவின் பெயரிலேயே இக்கைதுகளும் கடத்தல்களும் இடம்பெறுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதோடு இக்கைதுகள் சம்பந்தமாக அவரிடமே நேரடியாகச் சென்று கேட்கும்படியும், தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர யாழ் பிரதேசத்தில், போதைப்பொருட்களின் பாவனையை தேடிப்பிடித்து அழிக்கவேண்டிய இராணுவத்தினரும், காவற்துறையினரும்; தமது காவலரண்களுக்கு அழைக்கும் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களையும், ஆபாசப் பட குறுவட்டுக்களையும் வழங்கி மாணவர்களை தீயவழியில் வழி நடாத்தி வருகின்றனர்.

அத்துடன் மாணவ, மாணவிகளினை வீதிச்சோதனை என்னும் பெயரில் துன்புறுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்களை உடற் சோதனை செய்வதற்கு பெண் காவற்துறையினரோ, அல்லது பெண் இராணுவ வீரர்களோ இல்லாத நிலையில் ஆண் இராணுவ வீரர்களும், காவற்துறையினரும் பெண்களினை உடற் சோதனைக்கு உள்ளாக்குவதினை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டுகொண்டும் காணாமல் இருப்பது அவர்களை மேன்மேலும் செய்யத்தூண்டும் ஒரு நிகழ்வாக அமைந்து வருகின்றது.

அன்பான மாணவர்களே, இனியும் பொறுத்திருந்து மாற்றானிடம் மண்டியிடத் தேவையில்லை. ஒரு ஜனநாயக நாடு என கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா அரசு,
ஜனநாயகத்திற்கான எந்தவிதமான அடிப்படையுமற்று செயற்பட்டு வருகின்றது.

நாம் சுதந்திரமாக கல்வியினைத் தொடரவேண்டுமாயின் நமக்கென்று ஒரு நாடு அவசியம். இனியும் தாமதிக்காது அனைத்து மாணவர்களும் கேட்டுக் கிடைக்காத சுதந்திரத்தினை போராட்டம் மூலமாவது மீட்போம்.

மாணவர்களே நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் சுதந்திரத்தினை கேட்டு வாங்குவதா? இல்லை நாமாகவே எமது சுதந்திரத்தினைப் பெற்றுக்கொள்வதா?.

சர்வதேச நாடுகளும், ஐநா அமைப்புக்களும் இவை அனைத்தையும் கண்டும் காணாமலிருப்பதானது ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளும் இவ்வாறான செயல்களினை ஆதரிப்பதாகவே கருதவேண்டியுள்ளது.

உலகிலேயே போதைப்பொருட்களையும், ஆபாசப் பட குறுவட்டுக்களையும் மாணவர்களுக்கும், மக்களுக்கும் இராணுவ வீரர்களூடாகவும், காவற்துறயினரூடாகவும் வழங்கும் ஒரே நாடாக காணப்படுவது ஸ்ரீலங்கா மட்டுமே, அத்துடன் மாணவர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியவர்கள் கடத்தல், மக்கள் மீது தாக்குதல் நடாத்துதல் என்ற காட்டுமிராண்டித்தனமான, மனித நேயமற்ற ஒரு அரசாங்கம் நடைபெறுகின்றது என்றால் அதுவும் ஸ்ரீலங்கா மட்டுமே.

சர்வதேச நாடுகளும், ஐநா அமைப்புக்களும், மனித உரிமை அமைப்புக்களும் இவ்விடயத்தில் தலையிட்டு அப்பாவி மாணவர்களும், மக்களும் தாக்கப்படுவதையும், காரணமின்றி கைது செய்யப்படுவதனையும் தடுத்துநிறுத்த வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

யுத்தத்தினால் தமது உறவுகளையும், வீடு வாசல்களையும் இழந்து, கல்வி கற்பதற்காக தங்கியிருக்கும் மாணவர்கள் மீது நடாத்தப்படும் தொடர்தாக்குதல்களினால் மனமுடைந்து விரக்தியின் விளிம்பில் நிற்கும் தமிழ் மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தால் அது இலங்கை அரசை மிகவும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இலங்கை அரசும், சர்வதேச நாடுகளும், மனித உரிமைகளைக் கண்காணிக்கும் அமைப்புக்களும் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்று தமிழ் மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் கேட்டுக்கொள்வதோடு, இனியும் இவ்வாறு தாக்குதல்கள் தொடருமாக இருந்தால் தமிழ் மாணவர்களும், மக்களும் போராட்டங்களினை மேற்கொள்ளவேண்டி வரும் எனவும் எச்சரிக்கின்றோம்.


"மாணவர் சக்தி மாபெரும் சக்தி."
"விழுகின்ற பேனாக்கள் எழும் எங்கள் கைகளில் தமிழுக்கு விழுதாக எழுகின்றோம் எம் மண்ணில்"

ப.காண்டீபன்
தலைவர்,
தமிழ் மாணவர் ஒன்றியம்
2008-06-14

No comments: