Thursday 12 June 2008

2007ஆம் ஆண்டு தெற்காசிய ஊடகவியலாளர்களுக்கு இரத்தம் தோய்ந்த ஆண்டு-தெற்காசிய சுதந்திர ஊடகவியலாளர்கள் சங்கம்

2007ஆம் ஆண்டு தெற்காசிய ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான> இரத்தம் தோய்ந்த ஆண்டாக அமைந்திருந்தது என தெற்காசிய 'ஊடகக் கண்காணிப்பு- 2007' அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்காசியவைச் சேர்ந்த 25 ஊடகவியலாளர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு காரணங்களுக்காகக் கொல்லப்பட்டுள்ளனர் என தெற்காசிய சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகவியாளர்கள் கூடுதலாகக் கொல்லப்பட்ட நாடாக பாகிஸ்தான் காணப்படுகிறது. அங்கு ஏழு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக இலங்கையில் ஆறு ஊடகவியலாளர்களும், ஆப்கானிஸ்தானில் ஐந்து ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 25 பேரில் 21 ஊடகவியலாளர்களும், 4 ஊடகப் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

நேபாள ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் தர்மேந்திரா ஜா, நேபாளம் பத்திரிகையாளர் சங்கம் தலைவர் ராஜோந்திரா டால் மற்றும் நேபாள தெற்காசிய சுதந்திர ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கோபால் பிரசாத் தபாலியா ஆகியோர் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

ஊடக சுதந்திரம், படுகொலைகள் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றன தொடர்பாக எட்டு தெற்காசிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக நேபாள பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரா டால் கூறினார். இந்த நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளால் தொலைபேசி ஊடாக மிரட்டப்பட்டுள்ளனர். செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாதெனக் கூறி சில ஊடகவியலாளர்கள், குண்டர்கள் குழுக்களால் தாக்கப்பட்டிருப்பதுடன், ஆவணங்கள் சூறையாடப்பட்டும் சென்றுள்ளன என்றார் டால்.

இதனால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தமக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தோன்றியுள்ளது எனக் கருதுகின்றனர் என்றார் நேபாள பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர்.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் முக்கிய பங்கினை வகிப்பதாக நேபாள ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜா கூறினார்.

No comments: