மடு தேவாலயப் பகுதியில் சுமார் இரண்டரை கிலோ மீற்றர் பகுதியை யுத்த சூனியப் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்குரிய ஆயத்த வேளைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் நேற்று (June 14) தெரிவித்தார்.
ஜுலை மாதம் 2ஆம் திகதி மடு தேவாலய திருவிழாவை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனத் தெரிவித்த ஆயர் மடு தேவாலயப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி, அப்பகுதியில் பாதுகாப்புக்காக நிலைகொண்டுள்ள படையினரை தேவாலயப் பகுதியிலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்வதற்கான முன்னரங்குக் காவல் நிலைகள் அமைக்கப்பட்டு வருவதாக வன்னி கட்டளைத் தளபதி ஜகத் ஜயசிறி தெரிவித்ததாகவும் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.
இதேவேளை மடு தேவாலயப் பகுதியை யுத்த சூனிய பிரதேசமாக புலிகளும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். எனினும். புலிகளுடன் பேச்சு நடத்தி அந்த உறுதிமொழியை பெறவுள்ளதாகவும் ஆயர் தெரிவித்தார்.
படையினரின் வேலைகள் யாவும் பூர்த்தியடைந்ததன் பின்னர் மடு தேவாலயத்துக்கு செல்ல அனுமதி வழங்கிய பின்னர் ஆலயத்தை புனரமைத்து மடு மாதாவின் திருச்சொரூபம் கொண்டு வரப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துள் முடிவடையும் பட்சத்தில் ஆகஸ்ட் 15ஆம் திகதி திருவிழாவை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம் மடு தேவாலயத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட திருசசொரூபத்தை மீண்டும் இருந்த இடத்திலே கொண்டுவருவதற்கு புனித பாப்பாண்டவர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக புலிகள் அமைப்புக்கு அறிவித்தல் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தூதுவராலய செய்திகளை மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment