Monday 30 June 2008

அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்படுத்துவது அமுல்

கொழும்பு நகருக்குள் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் புதிய அவசரகால சட்டங்களை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாக தெரியவருகிறது.

கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகையை நோக்கிச் சென்ற பிக்கு மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிசார் தண்ணீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தையடுத்தே இந்தப் புதிய ஒழுங்குகள் குறித்து ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டப் பேரணிகள், ஊர்வலங்கள் என்பவற்றினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பிரதேசங்கள் அனைத்தையும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்க உயரதிகாரி ஒருவர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இந்த அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பாராளுமன்ற கட்டடத்தொகுதி ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளும் உள்ளடக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தப் புதிய திட்டத்தினால் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தும் வீதிகளுக்கோ அல்லது இடங்களுக்கோ எந்தவித கட்டுப்பாடுகளும் இருக்காது எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் நிமித்தம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: