Friday 13 June 2008

ஜனாதிபதி செயலகத்திடமிருந்து விளக்கம் கோரினார் கலாநிதி நேசையா

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலிருந்து விலகுமாறு கூறியமை தொடர்பாக ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி நேசையா, ஜனாதிபதி செயலகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

மூதூரில் 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் பேர் கொல்லப்பட்டமை, திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டமை உள்ளிட்ட 15 முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு முன்னெடுத்துவரும் இரண்டு விசாரணைகளிலிருந்து ஆணைக்குழு உறுப்பினர் நேசையாவை விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.

கலாநிதி நேசையா மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்துடன் தொடர்புபட்டவர் எனவும்இ மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகச் செயற்பட்டுவரும் அமைப்பு என்பதால் 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் மற்றும் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் கொலை வழக்குகளிலிருந்து விலகிக்கொள்ளவேண்டுமென ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.

எனினும், ஏனைய வழக்கு விசாரணைகளில் நேசையா இணைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி நிசாங்க உடலகம கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் தனது பங்களிப்புத் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விளக்கமளிக்கவேண்டுமென கலாநிதி நேசையா ஜனாதிபதி செயலகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: