Monday, 2 June 2008

பத்திரிகைகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது: வடஇலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் எச்சரிக்கை

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் காணப்படுமாயின் பிராந்தியப் பத்திரிகைகளை நிறுத்தவேண்டி ஏற்படுமென வடஇலங்கை ஊடகவியலாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

கொழும்பு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் யாழ் பிராந்திய ஊடகவியலாளர் பி.தேவகுமார் படுகொலை செய்யப்பட்டமையை அந்த அமைப்பு கண்டித்திருப்பதுடன், தற்பொழுது யாழ் குடாநாட்டில் இயங்கிவரும் பத்திரிகைகள் செய்திகளுக்காக இணையத்தளங்களையும், கொழும்புச் செய்திகளையும் நம்பியிருக்கவேண்டி ஏற்பட்டிருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தேவகுமாரின் படுகொலை தொடர்ப்பாக அதிர்ச்சியும், அவரின் குடும்பத்தினருக்கு கவலையையும் தெரிவித்திருக்கும் வடஇலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம், ஊடகப்பணியாளர்கள் செயற்படுவதற்கு உரிய சூழலையும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

“ஊடகப்பணியாளர்கள் குறிப்பாக யாழ் குடாநாட்டைச் சேர்ந்த ஊடகப்பணியாளர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும் காலாச்சாரத்தில் தேவகுமார் இறுதியாகப் பலியாகியுள்ளார்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணத்தில் மூன்று பிராந்திய பத்திரிகைகள் வெளியாகின்றன. நாட்டின் ஒரு பிராந்தியத்திலிருந்து கூடுதலாக வெளியிடப்படும் பத்திரிகைகளாக இவை காணப்படுகின்றன. எனினும், பாதுகாப்புக் காரணங்களால் அவற்றைத் தொடர்ந்தும் வெளியிடமுடியாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என வடஇலங்கை ஊடகவியலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஊடகப்பணியாளர்கள் பணிபுரிவதற்கு உலகில் மிகவும் மோசமான இடமாக யாழ்ப்பாணம் அமைந்துள்ளது என கடந்தவருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஊடகக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தமையையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த இருண்டு வருடங்களில் யாழ் குடாநாட்டில் ஊடகவியலாளர்கள், ஒப்புநோக்காளர்கள், விநியோகஸ்தர்கள் உட்பட 10 ஊடகப் பணியாளர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சனத் பாலசூரிய மற்றும் அதன் செயலாளர் போத்தல ஜயந்த ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறி அதற்கு எதிராக கொழும்பில் பல்வேறு ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன.

இந்த நிலையில் ஊடகசுதந்திரத்தைப் பாதுகாப்பது தொடர்பான பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: