Sunday, 1 June 2008

ரயில்வே கட்டணங்கள் இன்று முதல் 90 வீதத்தால் அதிகரிப்பு

கடந்த வியாழக்கிழமை முதல் பஸ் கட்டணங்கள் 27.2 வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், ரயில்வே திணைக்களம் இன்று முதல் ரயில் கட்டணங்களை 90 வீதத்தால் அதிகரித்துள்ளது.

"மிகக் குறைந்த கட்டணம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கிலோ மீற்றருக்குமான கட்டணங்கள் 90 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன" என ரயில்வே முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்திற்காக அதிகம் ரயில் வண்டிகளைப் பயன்படுத்துவோராக அரச ஊழியர்களே இருப்பதால் அவர்களது தவணைக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரயில்வே கட்டணங்கள் மிகக் கூடுதலாக அதிகரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில்வே தொழிற்பாட்டுக்கான செலவினங்கள் 120 வீதத்தால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கடைசியாக 2005 இல் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அரசாங்க மதிப்பீடுகளின்படி மிகக் கூடுதலானோர் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துகின்ற அதேநேரம், தினசரி 175,000 தனியார் வாகனங்கள் கொழும்பு நகருக்குள் வந்து செல்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ரயில் கட்டணங்கள் மிகக் குறைவாக இருப்பதன் காரணமாக பெரும்பாலானோர் தமது இரு வழிப் பயணத்திற்கும் ரயிலையே பயன்படுத்துவதாகவும் இந்த மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

கட்டணங்கள் அதிகரித்துள்ளபோதிலும், ரயில்வே திணைக்களம் கடும் நஷ்டத்தில் இயங்குவதாகத் தெரிவித்திருக்கும் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ரயில்வே தொழிற்பாட்டுக்கான வருடாந்த செலவினம் 10,000 மில்லியன் ரூபாய்களாக இருப்பதாகவும், ஆனால் 2,500 மில்லியன் ரூபாய்களை மாத்திரமே வருமானமாக ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: