Monday, 2 June 2008

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் சிவாஜில்ங்கம்

sivajilingam-mp.jpgஇலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.


தமிழகத்தின் அரியலூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

கடல் இலங்கையைப் பிரித்தாலும் தொப்புள்கொடி உறவு தமிழகத்துடன் தொடர்கிறது எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கை அரசின் இனப்படுகொலைகளை சர்வதேச நாடுகள் புரிந்துக்கொண்டுள்ளன. தனது மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்கு தெரியக்கூடாது என்பதாலேயே சர்வதேச மனித உரிமை அலுவலகம் அமைக்க இலங்கை அரசாங்கம் தயக்கம் காட்டி வருகிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவுகளைச் சமாளிக்க இலங்கைக்கு உலக நாடுகள் உதவி வருகின்றன.

இந்தியாவும் முதல் கட்டமாக 400 கோடி ரூபாவை வழங்கியுள்ளது. இரண்டாம் கட்டமாக தொடரூந்து அபிவிருத்திக்கு 400 கோடி ரூபாவை வழங்கவுள்ளது.

இத்தகைய உதவிகளை இந்தியாவும் உலக நாடுகளும் நிறுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.

அதன் மூலமே இலங்கை அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர முடியும் எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் ராணுவத் தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இது இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதைக் கண்டித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க போவதாகவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

தகவல்: தினமணி

No comments: