Monday, 2 June 2008

அம்பாறையில் இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை உடைத்து சிங்களப் படைகள் கொள்ளையடிக்கின்றன!!!

* பத்மநாதன் எம்.பி. முறையீடு

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு உட்பட பல்வேறு தமிழ்ப் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு அங்கிருக்கும் பெறுமதியான பொருட்கள் படையினரால் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்பட்டு படைமுகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் சர்வதேச சமூகம் இதனைத் தடுத்துநிறுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து அப்பகுதி மக்களை வெளியேற்றி அவர்களின் பொருளாதார வளங்களை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்மநாதன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அரசு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து இடம்பெயர்ந்த கஞ்சிகுடிச்சாறு, தங்க வேலாயுதபுரம், உடும்பன்குளம் ஆகிய மூன்று பிரதேசத்தில் 810 குடும்பங்கள் மீளக் குடியேற்றப்பட்டனர்.

இவர்களுக்கான வீடுகளை சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் நிர்மாணித்துக் கையளித்தன.

இதில் தங்கவேலாயுதபுரத்தில் நோப் திட்டத்தின் கீழ் 94 வீடுகளை நிர்மாணித்து இடம்பெயர்ந்த மக்களிடம் கையளித்தனர்.

பின் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் காரணமாக மீண்டும் இடம்பெயர்ந்து திருக்கோவில் பிரதேசத்தில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளையே படையினர் உடைத்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியதுடன், படைமுகாமும் அமைத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தங்கவேலாயுதபுரத்தில் 25க்கு மேற்பட்ட வீடுகளை உடைத்து ஓடுகள், கூரை மரங்கள், கதவு நிலைகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை படையினர் 20 உழவு இயந்திரங்களில் தமது படை முகாம்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேபோன்று கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் பிரதேச மக்களில் 30 குடும்பங்களுக்கு காஞ்சிரங்குடாவிலுள்ள நேருபுரத்தில் அமைக்கப்பட்ட வீடுகளின் ஓடுகள், மரங்களையும் படையினர் அண்மையில் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தொடர்ந்து தமிழ் மக்களின் பொருளாதாரத்தை சிங்கள பேரினவாதமும் படையினரும் திட்டமிட்டு அழித்து வருகின்றனர்.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக பலமுறை அரசிடம் நாம் முறைப்பாடு தெரிவித்தும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எனவே, தான் நாம் எமது மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் சர்வதேச சமூகங்களுக்கும் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் தெரிவித்தார்.

No comments: